|
ஜகத்குரு ஆதிசங்கரர் தமது உபதேசத்தை நிறைவு செய்தார். பிறகு, அங்கு வழங்கப்பட்ட உணவை சீடர்களோடு, தாமும் இரண்டு கைகளிலும் ஏந்தி வாங்கிக் கொண்டார். அப்போது, சற்றுத் தொலைவில் பசியோடு நின்றிருந்த ஒரு சிறுவனைக் கண்டார். அவன்பால் மனம் இரங்கிய அம்மகான், அவனை அருகே அழைத்தார். அவனது கைகளில் அந்த உணவைக் கொடுத்து, இதை யாருக்கும் தெரியாமல், யாரும் பார்க்காத படி சாப்பிடு என்று கூறினார். நேரம் கடந்தது. மகான் அளித்த உணவைக் கையில் வைத்துக் கொண்டு, அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் அந்த ஏழைச் சிறுவன். இதை கவனித்த ஆதிசங்கரர் அவனை அழைத்து, ஏனப்பா, மிகுந்த பசியாக இருக்கிறாய் என்றுதானே உனக்கு இந்த உணவைக் கொடுத்தேன். இன்னும் அதை நீ சாப்பிடாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறாயே, ஏன்? என்றார். எப்படி சாமி? யார் கண்ணிலும் படாமல் சாப்பிடச் சொன்னீர்கள். எங்கே போனாலும் கடவுள் என்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அதனால் தான் யாரும் என்னைப் பார்க்காத இடம் எங்காவது இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்றான் அந்தச் சிறுவன். எவ்வளவு பெரிய உண்மையை, இத்தனை எளிமையாக இந்தச் சிறுவன் தமக்கு உணர்த்தி விட்டானே. தம்மை விட இறைவன் மேல், இச்சிறுவன் வைத்திருக்கும் நம்பிக்கையே உயர்ந்தது என்று உணர்ந்த ஆதிசங்கரர், அச்சிறுவனை வணங்கி நீதான் என் குரு என்று கூறி போற்றினார். |
|
|
|