|
கேலி என்ற பெயரில், தரமற்ற பேச்சுகளை பேசுவது, கீழ்நிலை குணம் கொண்டோரின் இயல்பு. நல்லவர், கெட்டவர் என்று பாராமல், யோசியாமல் பேசும் அறிவற்ற பேச்சினால் ஏற்படும் விளைவை விளக்கும், சிலப்பதிகார நிகழ்வு இது: மாதவியிடம் பொருளை எல்லாம் இழந்த கோவலன், மீண்டும் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காக, தன் மனைவி கண்ணகியுடன், மதுரை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தான்; வழியில், கவுந்தி அடிகள் எனும் தவ மூதாட்டியை சந்திக்க, அவர்களுக்கு வழித் துணையாக வந்தார், கவுந்தி அடிகள். மூவரும் பயணத்தை தொடர, வழியில், காமுகன் ஒருவன், தன் காதற் கிழத்தியோடு வந்தான். அவ்விரு வரும், கோவலன் - கண்ணகியின் கண்ணியமான அழகை கண்டு வியந்து, கவுந்தி அடிகளிடம், அம்மையே... மன்மதனும், ரதியையும் போன்றிருக்கும் இவர்கள் இருவரும் யார்? எனக் கேட்டனர்.
இவர்கள் என் மக்கள்... என்றார், கவுந்தி அடிகள். அதைக் கேட்டதும், இருவரும் நகைத்து, அம்மையே... ஒரு வயிற்றில் பிறந்தோர், கணவன், மனைவியாவது, நீர் கற்ற நீதி நூல்களில் உள்ளதோ... என சொல்லி, கேலி செய்து சிரித்தனர். இதைக் கேட்டு, செவிகளை பொத்தி, நடுங்கி நின்றாள், கண்ணகி. இதனால், கோபமடைந்த கவுந்தி அடிகள், முறை தவறி, இழிவாக பேசிய நீங்கள் இருவரும், நரிகளாகப் போகக் கடவது... என, சாபம் கொடுத்தார். உடனே அவர்கள் நரிகளாக மாறினர். அவர்களுக்காக மனம் இரங்கிய கோவலனும், கண்ணகியும், அம்மையே... நல்லொழுக்க நெறியிலிருந்து விலகிய இவர்கள், தமது அறியாமையில் இவ்வாறு பேசி விட்டனர். இவர்கள் தவறை மன்னித்து, சாப விமோசனம் அளிக்க வேண்டும்... என்று வேண்டிக் கொண்டனர். அதன் காரணமாக, 12 மாதங்கள் நரிகளாக திரிந்து, துன்பத்தை அனுபவித்து, பின், சுய உருவை அடைவர்... என, சாப விமோசனம் அளித்தார், கவுந்தி அடிகள். குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளிகணமேயும் காத்தல் அரிது என்பார், திருவள்ளுவர். நல்ல பண்புகளை உடைய பெரியோரின் சினத்திலிருந்து, ஒருவரை காத்தல் அரிது என்பதை உணர்ந்து, எதை அடக்குகிறமோ இல்லையோ, நாவை அடக்கி, வீண் பேச்சை தவிர்க்க வேண்டும். மறந்தும், அடுத்தவர்களை இழிவாக பேசக் கூடாது! |
|
|
|