|
பிரமாண்டமான யாகசாலை, மன்னன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித்தைக் கொன்ற தக்ஷகனை அழிக்க வேண்டும் என்பதற்காக கர்ப்ப யாகம் செய்கிறான். யாக மந்திரங்களின் பலத்தினால் பல்வேறு வகையான நாகங்கள் யாக குண்டத்தில் விழுந்து மடிகின்றன. எனவே தக்ஷகன் இந்திரனிடம் அடைக்கலம் புகுந்தான். இந்திரன் தக்ஷகனைக் காப்பாற்றுவதாக வாக்களித்தான். இதனால் இந்திரனையும் சேர்த்துக் கொல்ல வேண்டும் என்று யாக மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. மந்திரங்களின் சக்தியைக் கண்ட இந்திரனோ பயந்து, கொடுத்த வாக்கை மறந்து ஓடிவிடுகின்றான். அந்தோ பரிதாபம் தக்ஷகனின் நிலை! சிருங்கி என்ற முனிவரின் சாபத்தினால் பரீட்சித்தைக் கொல்லும் கட்டாயத்திற்கு ஆளானான் தக்ஷகன். எனவே அவன் எந்த விதத்திலும் பரீட்சித்தின் மரணத்திற்கு நேரடிக் காரணமல்ல. ஆனால் கர்ம வினை யாரை விட்டது? இந்தச் சூழ்நிலையில் தக்ஷகன் என்ன செய்திருக்க வேண்டும்? யாரைச் சரணடைந்திருக்க வேண்டும்?
இதற்கான பதிலை இன்னொரு நிகழ்ச்சி விளக்குகிறது. ஒருமுறை அர்ஜுனன் காண்டவ தகனம் செய்த போது பல்வேறு நாகங்கள் அழிவதற்கு மறைமுகக் காரணமாக இருந்தான். அவனைப் பழிதீர்ப்பதற்காக ஒரு நாகம் சபதம் ஏற்று நாகாஸ்திரமாக மாறி, அர்ஜுனனின் பகைவனான கர்ணனிடம் வந்து சேர்ந்தது. மகாபாரதப் போரில் நாகாஸ்திரம் அர்ஜுனனைக் கொல்ல வரும்போது கர்மவினையின் பலனான இந்த நாகாஸ்திரத்திடமிருந்து தன்னைக் காக்க பகவான் கிருஷ்ணனைச் சரணடைந்தான். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு சென்றது. இந்த இரண்டு மகாபாரதக் கதைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது நமக்கு ஓர் உண்மை விளங்குகிறது. நம்மைக் காப்பாற்றத் தகுதி இல்லாதவர்களிடம் நாம் சரணடைந்தால் தக்ஷகனுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் வாய்க்கும். முன்வினைப் பயனாலேயே நம் வாழ்க்கையில் துன்பம் வருகிறது. அதைப் போக்கடிக்க நம்மில் சிலர் மது, கேளிக்கைகள் என்று புதிது புதிதாக இந்திரிய சுகங்களை நாடியும் அதனால் தங்கள் துன்பத்தைப் போக்க முடியும் என்று நம்பியும் புலனின்பப் பொருட்களைச் சரணடைகின்றனர்.
அவற்றிற்காக தர்மத்தின் பாதையிலிருந்து விலகி அதர்மத்தையும் செய்கின்றனர். இவர்கள் எல்லாம் தக்ஷகனைப் போன்றவர்கள். நம் துன்பத்தைப் போக்குகின்ற சக்தி இந்திரியங்களுக்கோ புலனின்பப் பெருள்களுக்கோ இல்லவே இல்லை. இவை யாவும் துக்கத்தையே அதிகரிக்கும். ஒருவன் துக்கத்தினால் மதுவை அருந்தச் செல்கின்றான். மது அவன் துக்கத்தை நீக்கும் என்று நம்பி அதைத் தொடர்கின்றான். முடிவு? செல்வம் அழிந்து மானம் அழிந்து, அமைதி அழிந்து, உடல் நலம் கெட்டது மட்டுமின்றி அவன் துக்கமும் பன்மடங்கு அதிகரிக்கிறது. அதற்குப் பதிலாக இறைவனிடம் ஐந்து நிமிடம் அழுது பிரார்த்தனை செய்திருந்தால் அவன் மனம் நிம்மதி அடைவது மட்டுமின்றி இறைவனும் அவனைக் காப்பாற்றியிருப்பான். நம் துன்பத்திற்குக் காரணம் என்ன? என்று யாருக்குத் தெரியுமோ, நம்மைக் காப்பாற்றுகின்ற சக்தியும் அன்பும் யாருக்கு உள்ளதோ அவரிடம் சரணடைய வேண்டும். இதுதான் அர்ஜுனன் செய்த புத்திசாலித்தனமான செயல். இதனையே வள்ளுவர்.
தக்கார் இனத்தானாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.
தக்க பெரியோரைத் துணையாகக் கொண்டு அவர் வழி நடக்க வல்லவனுக்குப் பகைவரால் துன்பம் நேராது என்று உணர்த்துகிறார்.
பகவானைத் தவிர நம்மைக் காக்க சக்தியும் கருணையும் உள்ள பெரியவர் நம் வாழ்வில் யாராக இருக்க முடியும்? அவரைச் சரணடைவோமாக! |
|
|
|