|
இராமானுஜர் திருவரங்கம் கோயிலில் நிர்வாகத்துறையில் சீர்த்திருத்தங்களைச் செய்தது போல, கோயிலில் வேதங்களுடன், திவ்யப் பிரபந்தப் பாடல்களையும் ஓதுமாறு ஏற்பாடு செய்தார். ஒருமுறை இராமானுஜர் திருமலை திருப்பதியில் தம் சீடர்களுடன் தங்கியிருந்தபோது, அவ்விடத்திற்கு கொண்டி என்ற இடைக்குல மாது தயிர் கொண்டு வந்தாள். அவளிடம் இராமானுஜரும், சீடர்களும், தயிர் வாங்கிக் குடித்தார்கள். அவர்கள் குடிக்கக் குடிக்க கொண்டி தயிர் கொடுத்துக் கொண்டேயிருந்தாள். கொண்டிக்கு அந்த வைணவர்களைப் பார்த்து பரவசம் உண்டாயிற்று; ஞானப் பற்றதலும் ஏற்பட்டது. அந்த அம்மையாரிடம் அவர்கள் தயிர் என்ன விலை என்று கேட்டார்கள். எனக்கு பணம் ஏதும் தேவையில்லை; எனக்கு சம்சார பந்தம் விட்டு மோட்சம் கிடைக்க வழி செய்யுங்கள்- என்று கொண்டி அவர்களைக் கேட்டுக் கொண்டாள்.
உடனே, இராமானுஜர், உன்னால் மோட்சம் பெற முடியும். நாங்கள் மோட்சம் கொடுக்கத் தகுதியற்றவர்கள். அதைக் கொடுப்பவர் திருமலையின் மீது அமர்ந்துள்ளார். அவரிடம் போய்க்கேள் என்றார். உங்களைப் பார்த்ததும் உங்களால் எனக்கு மோட்சம் கொடுக்க முடியும் என்று நான் நினைத்து விட்டேன். ஆனால் திருமலை மீது வீற்றிருப்பவர் பேச மாட்டாரே! ஆதலால் தாங்கள் ஒரு சீட்டெழுதி சிபாரிசு செய்து எனக்கு மோட்சம் (பரமபதம்) அளிக்கும் படி செய்யுங்கள் என்றாள் கொண்டி. இராமானுஜரும் அவள் கேட்டபடியே இசைந்து பெருமாளுக்கு சீட்டெழுதிக் கொடுத்தார். இராமானுஜரைச் சூழ்ந்திருந்த சீடர்கள் எல்லோரும், இது என்ன வேடிக்கையும், விநோதமுமான செயலாக இருக்கிறதே என்று வியந்து போனார்கள்.
அந்த சீட்டோலையை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அவள் அங்குள்ள திருக்குளத்தில் குளித்து, கோயிலை வலம் வந்து, வெங்கடாசலபதியைத் தொழுதபின், சீட்டோலையை சன்னதியில் சமர்ப்பித்தாள். அர்ச்சகர்கள், இதென்ன சீட்டு என்று கேட்டார்கள். பெரியவர் இராமானுஜர் பெருமாளுக்குக் கொடுக்கச் சொன்ன சீட்டுதான் இது என்று கொண்டி சொன்னாள். ஒன்றும் புரியாத அர்ச்சகர்கள் இதென்ன இராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணிக் கொண்டு அந்தச் சீட்டை வெங்கடாசலபதியின் முன்னர் வைக்கப்போகும்போது, பெருமாள் அச்சீட்டை கை நீட்டி பெற்றுக் கொண்டார். பெருமாள் அனைத்தும், அறிந்து, கொண்டியைப் பார்த்து, உனக்கு பரமபதம் கொடுத்தேன் என்று அருள் செய்தார். அப்போது, அங்கு மிகுந்த ஒளியுடன் கூடிய ஒரு விமானம் விண்ணிலிருந்து இறங்கி இடைச்சி கொண்டியை ஏற்றிக் கொண்டு பறந்து மோட்சம் என்னும் பரமபதம் சென்று சேர்ந்தது. இவ்வாறு தயிர் விற்ற கொண்டி எனும் இடைக்குல மாதுக்கு இராமானுஜர் எழுதிக் கொடுத்தச் சிபாரிசுச் சீட்டால் இறைவன் பெருமாள், பரமபதம் கொடுத்து அருள் செய்தார்.
|
|
|
|