|
காஸ்யப முனிவர் புத்திரப்பேறுக்காக யாகம் நடத்தினார். அவரது அழைப்பை ஏற்று இந்திரன் தலைமையில் தேவர்கள், ரிஷிகள், வாலகில்யர்கள் என்னும் குள்ள முனிவர்கள் பங்கேற்றனர். குள்ள முனிவர்களைக் கண்ட இந்திரன் கேலி செய்தான். கோபம் கொண்ட வாலகில்யர்கள், ஆணவம் வேண்டாம்! நாங்கள் நினைத்தால் புதிய இந்திரனைப் படைப்போம் என சவால் விட்டனர். பயந்து போன இந்திரன் காஸ்யபரிடம் உதவியை நாடினான். சக்தி வாய்ந்த வாலகில்யர்களைச் சமாதானம் செய்கிறேன் என காஸ்யபர் வாக்களித்தார். வாலகில்யர்களே! புது இந்திரனைப் படைக்க வேண்டாம். அதற்கு பதிலாக பறவைகளுக்கு இந்திரனாக கருடனைப் படையுங்கள். அவன் மூலம் இந்திரனை தோற்கடிக்கச் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். வாலகில்யர்கள் வழிகாட்டுதல்படி புத்திரபேறு யாகம் நடந்தேறியது.யாகபிரசாதம் காஸ்யபரின் மனைவியான வினதைக்கு தரப்பட்டது. அவளுக்கு அருணன், கருடன் என்னும் இரு பிள்ளைகள் பிறந்தனர். பின்னாளில் கருடனே பறவைகளின் இந்திரனாக பட்சி ராஜன் என பெயர் பெற்றான். கருடன் வினதையின் உயிர் காக்க இந்திரனுடன் போரிட்டு அமிர்த கலசத்தைக் கொண்டு வந்தான். கருடனின் செயலால் வாலகில்யர்களுக்கு இந்திரனால் ஏற்பட்ட அவமானம் நீங்கியது. |
|
|
|