|
அவர் ஒரு நல்ல மேஸ்திரி. ஒரு காலகட்டத்தில் தனக்கு வயதாகிவிட்டதால், வேலையிலிருந்து ஓய்வு பெறலாம் என நினைத்தார் அவர். வேலை வேலை என்று இருந்த தான், இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் சொன்னார். தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா? என்று கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கி விட்டாலும், அவரால் வழக்கமான ஈடுபாட்டோடு பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனோ தானோவென்று ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில் வீடு கட்டினார்.
வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது என்கிற அலட்சியம் அவரது பணியில் தெரிந்தது. அவசர அவசரமாகக் கட்டி முடித்தார். பணி முடிந்ததும் அந்த வீட்டைப் பார்வையிட வந்தார் முதலாளி. வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டின் பத்திரத்தை எடுத்து நீட்டினார், கான்ட்ராக்டர். இந்தாருங்கள். இந்த வீடு உங்களுக்குத்தான்! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்காக என் அன்புப் பரிசு! என்றார், முதலாளி. மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், வழக்கத்தைவிட இன்னும் பல விதங்களில் யோசித்து, புதுமையான வடிவமைப்பில், இருப்பதிலேயே உயர்தரமான பொருட்களை பயன்படுத்திக் கட்டியிருப்பேனே! சே! இப்போது இப்படி அநியாயமாக என்னை நானே ஏமாற்றிக்கொண்டேனே. என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
பல சந்தர்ப்பங்களில் நம்முடைய மனப்பழக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. கடவுள் என்னும் முதலாளி, நமக்கான வாழ்க்கையை நாமே வடிவமைக்க சில வாய்ப்புகளைத் தருகிறார். அதை அறியாமல், நாம் அலட்சியமாக இருந்து விடுகிறோம். பிறகு, நம் அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழும் போது, அதிர்ச்சி அடைகிறோம்! இப்படி ஆகுமென்று தெரியாமல் போய்விடாதே! என்று மனம் வெதும்புகிறோம் வேதனைப்படுகிறோம். ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி ஒவ்வொரு நாளும் அதில் ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்... ஜன்னல் பொருத்துகிறோம்.. நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன. எந்தச் செயல் நமக்கு என்ன விளைவைத் தரும் என்று தெரியாது. ஆனால், நல்லதைச் செய்தால் நல்லது நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்! எனவே, ஒவ்வொரு செயலையும் உள்ளம் ஒன்றி உன்னதமாகச் செய்வோம்!
|
|
|
|