|
உயிர்களை நேசிக்க வேண்டும் என்பதற்காக திருவிளையாடல் ஒன்றை மதுரையில் சிவபெருமான் நிகழ்த்தினார். தாயை இழந்த 13 பன்றிகள் பாலுக்காக அழுதன. அதைக் கண்டு மனமிரங்கிய சிவபெருமான் பூமிக்கு வந்தார். தாய்ப்பன்றியாக உருமாறி பசியால் வாடிய குட்டிகளுக்கு பாலூட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் உயிர்கள் அனைத்தும் தன் பிள்ளைகள் என்பதை உணர்த்தினார். கிருஷ்ணர் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்று உண்டு. ஆயர்பாடியில் இருந்த குளத்தில், காளிங்கன் என்னும் பாம்பு இருந்தது. நீர் குடிக்க வரும் மாடுகள், ஆயர்களை விழுங்கி உணவாக்கியது. இதை அறிந்த கிருஷ்ணர், காளிங்கனை அடக்க அதன் தலை மீதேறி நடனமாடினார். வலி தாங்காமல் வருந்திய காளிங்கன், மன்னிக்கும்படி கிருஷ்ணரிடம் பணிந்தது. விழுங்கிய உயிர்களை கக்கி விட்டு கடலுக்குச் செல்லும்படி உத்தரவிட்டார் கிருஷ்ணர். உயிர் பெற்ற பசு, ஆயர்கள் கிருஷ்ணரின் கருணையை எண்ணி வியந்தனர். உயிர்க்கொலை கூடாது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
சைவ உணவு சிறந்தது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. புலால் உண்பதால் புத்தி தடுமாற்றம், உடல்நலக்குறைவு உண்டாகிறது. உடல் பருமன், சர்க்கரை, இருதயநோய் எளிதில் தாக்குகின்றன. எடுத்துக்காட்டாக சிறைக் கைதிகளில் 99.9% அசைவம் உண்பவர்களாக இருப்பதால் நிதானம், சிந்திக்கும் திறன் இழந்து குற்றங்களில் ஈடுபட்டு தண்டனைக்கு ஆளாகின்றனர். முதல் உலகப்போரில் காயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக சைவ, அசைவ உணவு அடிப்படையில் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர். புண்ணை ஆற்ற ஆலிவ் எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. சைவம் உண்பவர்கள் ஓரிரு மாதத்தில் குணம் பெற்றனர். அசைவம் உண்பவர்கள் நீண்டநாள் காயம் ஆறாமல் சிரமப்பட்டனர். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததே இதற்கு காரணம்.
400 ஆண்டுக்கு முன் தமிழகம் வந்த இத்தாலியப்பயணி மார்க்கோ போலோ, தமிழர்கள் தினமும் ஆற்றில் இரு முறை நீராடுகின்றனர். அவர்களின் உணவில் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. சைவம் உண்பதால் இயற்கையாக 100 ஆண்டுக்கும் மேலாக வாழ்கின்றனர் என குறிப்பிடுகிறார். மனத்துணிவுக்கும் சைவம் துணை நிற்பதை ஆங்கிலேயரை எதிர்த்த காந்திஜி, வினோபாஜி, சுபாஷ் சந்திர போஸ், வாஞ்சி நாதனின் வரலாறு உணர்த்துகிறது. விலங்குகள் பேசும் மொழியை அறிந்தவர் மன்னர் சாலமன். அவர் எகிப்து ராணி சீபாவை மணந்து விட்டு, வீரர்களுடன் இஸ்ரேலுக்கு வரும் வழியில் சாரையாக எறும்புகள் சென்றன. அதில் ஒரு இளம் எறும்பு, இந்த வீரர்கள் நம்மை நசுக்கி கொல்லப் போகிறார்கள் என வருந்தியது. அதற்கு வயதான எறும்பு, நீதிமான் சாலமன் நம்மைக் கொல்ல மாட்டார். கவலைப்படாதே என்றது. இதைக் கேட்ட சாலமன், வீரர்களை மாற்றுப் பாதையில் செல்ல கட்டளையிட்டார். ராணி சீபா, கேவலம்.... எறும்புக்காகவா இந்த நடவடிக்கை?
என்றதற்கு எளிய உயிர்களைக் காப்பது பலமானவர்களின் கடமை என பதிலளித்தார். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்கிறார் மகாகவி பாரதியார். திருவள்ளுவர், புலால் மறுத்தல் என தனி அதிகாரமே எழுதியுள்ளார். வள்ளலார், அப்பா...நான் ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறார். ஆதிசங்கரர் யாத்திரையாக காஷ்மீர் சென்ற போது, வழியெங்கும் உள்ள கோயில்களில் பலியிடும் முறையை தடுத்து நிறுத்தினார். பத்தாம் திருமுறையான திருமந்திரம், அன்பே சிவம் என இறைவனை வணங்குகிறது. அந்த வழியில் நாமும் உயிர்க்கொலையை மறுத்து, அன்பு காட்டி மகிழ்வோம்.
|
|
|
|