|
குருவிடம் சீடர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். சிஷ்யர்களிடம் குரு ஒரு கேள்வி கேட்டார். ஒரு தந்தை, அவருக்கு நான்கு பிள்ளைகள். அவருடைய சொத்து 77 ஆயிரம் வராகன்கள். தனது சொத்தை பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்க எண்ணினார் தந்தை. அவருக்கு மூத்த பிள்ளையிடம் சற்று அளவுக்கு அதிகமான பாசம். மூன்று பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 11 ஆயிரம் வராகன்களைப் பிரித்துத் தந்தார். மீதியை மூத்த பிள்ளைக்குத் தந்தார். அப்படியென்றால் மூத்த பிள்ளைக்கு என்ன வரும்? சொல்லுங்க என்றார். சிஷ்யர்கள் அனைவரும், மூத்தவனுக்கு 44 ஆயிரம் வராகன்கள் வரும் என்று பதிலளித்தனர். ஆனால், பவசேனன் எனும் ஒரு சிஷ்யன் மட்டும் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்ததைக் கண்ட குரு, அவனிடம், நீ ஏன் சும்மா இருக்கிறாய்? பதில் சொல், மூத்தவனுக்கு என்ன வரும்? என்று கேட்டார். சீடன் பவசேனன் பவ்யமாய் எழுந்து, குருவே, மூத்தவனுக்கு அதிக பணம் வந்து விட்டதே என்ற கர்வமும் அகங்காரமும் வரும். பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிடாத தந்தைக்குப் பாவம் வரும் என்றான். பவசேனா, நீ இந்த விடையை எவ்வாறு கண்டு பிடித்தாய்? என்று குரு கேட்க, தாங்கள் மூத்தவனுக்கு, எவ்வளவு வரும் என்று கேட்காமல், என்ன வரும் என்று கேட்டீர்கள். அந்தக் கேள்வியின் நுட்பத்தை அறிந்து பதில் அளித்தேன் என்றான் பவசேனன்.
|
|
|
|