|
கபீர்தாஸருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தையற்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தான். வெளியிரிலிருந்து வந்த செல்வந்தர் ஒருவர், ஒரு சட்டையைத் தமக்காகத் தைத்துக் கொடுக்கும்படி சொல்லி விலை உயர்ந்த துணியைக் கொடுத்தார். வந்தவரின் எல்லா அளவுகளையும் எடுத்துக் கொண்டு கழுத்துப் பக்கத்தில் மட்டும் அளவை எடுக்காமல் விட்டு விட்டான் கபீர்தாஸரின் மகன். நாளை மறுநாள் காலை எட்டு மணிக்கு வந்தால் சட்டையைத் தயாராக தைத்து வைத்திருப்பேன் என்றும் சொல்லி அனுப்பினான். அன்று முழுவதும் கழிந்தது. மறுநாளும் துணி வெட்டப்பட்டுத் தைக்காப்படாமல் இருக்கவே, கபீர்தாஸருக்கு மகனின் செய்கை கோபத்தை வரவழைத்தது, மகன் ஒன்றும் செய்யாமல் இருப்பதைக் கண்டு, சொன்ன சொல் தவறாத ராம பிரானை வணங்கும் எனக்கு இப்படி ஒரு பிள்ளை இருப்பது எவ்வளவு இழிவு? என்றெண்ணி வருத்தமுற்றார்.
மறுநாள் மாலை ஆறு மணிக்கு அந்தத் துணியை இரண்டாகக் கிழித்து அவற்றை இரண்டு பைகளாத் தைத்து விட்டான். செல்வந்தர் வரும் நேரம் நெருங்கி விட்டது. கபீர்தாஸருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் மகனோ கவலையின்றி, வேறு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். எட்டு மணிக்கு செல்வந்தர் வீட்டு வேலைக்காரன் ஒருவன் பரபரப்புடன் வந்து, அந்தத் துணியைத் øத்திருக்காவிட்டால் இரண்டு பைகளாகத் தைத்துக் கொடுங்கள் என்று கேட்டான். விவரம் கேட்டபோது, செல்வந்தர் இறந்து விட்டார். அந்தப் பையில் வைத்து அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னான். உடனே, தைக்கப்பட்டிருந்த அந்தப் பைகளை வந்தவரிடம் கொடுத்தான் மகன். கபீருக்கு வியப்பு ஏற்படவே, உனக்கு எப்படி இந்த மாதிரி பைகளாகத் தைக்கத் தோன்றியது? என்று மகனிடம் கேட்டார். நான் உங்கள் மகன் அல்லவா? எனக்குத் தெரியாதா? நான் கை, கால் இடுப்பு என எல்லா இடங்களிலும் அளவை எடுத்துக் கொண்டு வரும்போது கழுத்துப் பகுதியில் எமன் இருந்து கொண்டு, இன்னும் இரண்டு நாட்கள்தான் அவனுக்கு வாழ்க்கை என்று சொன்னான். அதனால்தான் நான் துணியைத் தைக்காமல் பைகளாகத் தைத்தேன் என்றான். காலன் எந்தெந்த உருவில், எப்படி வருகின்றான் என்று கமீர்தாஸர் வியப்புற்றார்.
|
|
|
|