|
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் புறப்பட்டார். கீரந்தன் என்னும் அந்தணர் வீட்டில் பேசும் குரல் கேட்டது. அவர் தன் மனைவியிடம், நாளை காசி யாத்திரை செல்கிறேன். திரும்பி வர நாளாகும். நம் மன்னரின் நல்லாட்சியில் வாழும் நமக்கு குறையேதுமில்லை என்றார். இதை கேட்ட மன்னர் அந்தணர் வீட்டை கண்காணித்து வந்தார். ஒரு நாள் நகர்வலம் வந்தபோது அந்த வீட்டில் ஏதோ ஆண்குரல் ஒலிப்பது கேட்டு கதவை தட்டினார். கீரந்தன் காசியிலிருந்து ஊர் திரும்பியிருந்ததை அவர் அறியவில்லை. ராத்திரியில் கதவைத் தட்டுபவன் யார்? என்று உள்ளே இருந்த கீரந்தன் கேட்டார். சுதாரித்த மன்னர், சந்தேகம் வராத விதத்தில் எல்லா வீட்டுக்கதவையும் தட்டி விட்டு ஓடினார். திருடன் வந்ததாக கருதிய அப்பகுதி அந்தணர்கள், மன்னரிடம் முறையிட்டனர். குற்றவாளி பிடிபட்டால் என்ன தண்டனை தரலாம்? என மன்னர் கேட்க கையை வெட்டலாம் என்றனர். அப்படியா... கதவைத் தட்டியது நான் தான் என்ற மன்னர், யாரும் எதிர்பாராத விதத்தில் வாளால் தன் கையை வெட்டி கொண்டார். நீதியை நிலைநாட்டிய மன்னரை போற்றும் விதத்தில், அவருக்கு மக்கள் பொன்னால் ஆன கையை பொருத்தினர். இதனால் பொற்கைப் பாண்டியன் என பெயர் வந்தது. |
|
|
|