|
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொன்றை அறிவித்து, அதன்படி நடக்க வழிகாட்டுகிறது, தெய்வம். உணர்ந்து செயல்படுவோர், உள்ளம் மகிழ்கின்றனர்; உதாசீனம் செய்பவர்களோ, உள்ளக்கவலை தீர, வழி தேடுகின்றனர். தெய்வமே, நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால், திருநெல்வேலி என பெயர் பெற்ற திருத்தலத்தில், நெல்லையப்பர் எனும் புலவர் வாழ்ந்து வந்தார்; இலக்கண, இலக்கியங்களில் பெரும் புலமை பெற்றவர். ஒருநாள், தன் வீட்டில் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, திருநெல்வேலி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் நெல்லையப்பர், துறவி வடிவில் அங்கு வந்தார். அவரை வணங்கி, வரவேற்று, சுவாமி... தாங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்ன... எனக் கேட்டார், நெல்லையப்பர். துறவியாக வந்த சிவபெருமானோ, யாம் உன்னிடம் பொன்னும், பொருளும் வேண்டி வரவில்லை; வேறொன்றை விரும்பி வந்தோம். கொடுப்பதற்கு நீர் உடன்பட்டால், அது என்னவென்று கூறுவேன்... என்றார்.
அடியேனிடம் இருப்பது எதுவாக இருந்தாலும், நிச்சயம் தருவேன்; கேளுங்கள்... என்றார் புலவர். உன்னிடம் திருநெல்வேலி தல புராணம் உள்ளது; அதை தந்தால், பத்து நாட்களுக்குள் எழுதி, திருப்பிக் கொடுத்து விடுவேன்... என்றார் துறவி. நெல்லையப்பரோ, தாங்கள் சொல்லும் நூல் அடியேனிடம் இல்லை; இருந்தால் அளித்து விடுவேன்... என, பதில் கூறினார். ஆனாலும், உன்னிடம் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்; மறைக்காமல் அப்புராணத்தை கொடு... என்றார், துறவி. அச்சமயம், நெல்லையப்பரின் அருகில் இருந்த அனவரத விநாயகம் என்பவர், பத்து நாளில் தருவதாக சொல்; இத்துறவி போய் விடுவார்... என்று சொல்ல, அவ்வாறே சொன்னார், நெல்லையப்பர். புலவரின் நெற்றியில் திருநீறு இட்டு, மகனே... சொன்ன சொல்லை காப்பாற்று... என கூறிச் சென்றார், துறவி. மறுநாள், அதிகாலையில், அந்தணர் ஒருவர் கைகளில், திருநெல்வேலி மான்மிய நூலோடு புலவர் வீட்டிற்கு வந்து, குறுக்குத்துறையில் தங்களுக்கு ஒரு மண்டபம் இருக்கிறதல்லவா... அங்கே, தினமும் நான் திருநெல்வேலி மான்மியத்தை படிக்க விரும்புகிறேன்; அனுமதிக்க வேண்டும்... என, வேண்டினார். அதைக்கேட்டு வியந்த நெல்லையப்பர், நேற்று துறவியொருவர் வந்து திருநெல்வேலி தல புராணம் கேட்டார்; இன்று இவர் வந்து இப்படி கேட்கிறாரே... என எண்ணி, அனுமதி அளித்தார்.
அத்துடன் நிறுத்தவில்லை, சிவபெருமான்... அவ்வூரில் வசித்த முத்தப்ப பிள்ளை என்பவரின் கனவில் காட்சி தந்து, அன்பனே... யாம் நெல்லையில் கோவில் கொண்டிருக்கும் நெல்லையப்பர்; வடமொழியில் உள்ள திருநெல்வேலி தல மான்மியத்தை, தமிழ்ப்பாடல்களாக பாடும்படி, இவ்வூரில் உள்ள நெல்லையப்ப புலவரிடம் சொல்... எனக் கூறி, மறைந்தார். மெய் சிலிர்க்க விழித்தெழுந்த முத்தப்ப பிள்ளை, புலவரை தேடிப் போய், சிவபெருமான் கட்டளையை விவரித்தார். புலவருக்கோ ஆனந்தக் கண்ணீர்! காண்பாரார் கண்ணுதலோன் காட்டாக் காலே... என்று, திருமுறைகள் சொல்லியபடி, சிவபெருமானே... என் தெய்வமே... நீ உணர்த்தா விட்டால் என்னால் எவ்வாறு உணர முடியும்... என, முறையிட்டு தொழுதார். தெய்வமே நேரில் வந்து என்னை தல புராணம் எழுதச் சொல்லியுள்ளார். அதை, நான் உணராததால், அடுத்தவர் கனவில் போய் அறிவுறுத்தியிருக்கிறார்... என்று கூறியபடி, தல புராணம் எழுத துவங்கினார். 6,892 பாடல்கள் கொண்ட அந்நூலை எழுதும் போது, அவ்வப்போது கனவில் வந்து திருத்தங்களை சொன்னார், சிவபெருமான். நூல் அரங்கேற்றியது. புலவரிடம் தலபுராணத்தை கேட்டு எழுதச் சொன்ன தெய்வம், நம் ஒவ்வொருவரிடமும் உள்ள திறமையை, நன்முறையில் வெளிப்படுத்தவும் வழிகாட்டுகிறயது; உணர்ந்து செயல்பட வேண்டியது நம் பொறுப்பு! |
|
|
|