|
ஆசிரமத்தில் ஒருநாள் குரு ஹோமம் செய்து கொண்டிருந்தார். சுற்றிலும் அவரது சீடர்கள். அன்று காலை புதிதாகக் காய்ச்சிய நெய்யை ஓர் உத்தரணி எடுத்து ஹோமத்தில் சேர்த்தவாறே வேத மந்திரத்தை உச்சரித்தார் குரு. அதைக் கண்ட ஒரு சீடன். குருவே, ஜீவித்திருக்கும் நாள் வரை நமக்கே எவ்வளவு நெய் வேண்டியிருக்கிறது? உலகத்துக்கெல்லாம் தந்தையாகிய பரம்பொருளுக்கு ஓர் உத்தரணி நெய்யை அர்ப்பணித்து விட்டு, விஷ்ணவே ஸ்வாஹா என்றால் அது அந்தப் பரமாத்மாவுக்குப் போதுமா? என்றான்.
குரு, ஒரு ஏக்கர் நிலத்தில் ஆறு மரக்கால் விதை நெல்லை விதைத்துப் பயிர் செய்கிறான் ஒரு விவசாயி. மூன்று மாதம் கழித்து அறுவடைக்குப் பின், அவனிடம் எவ்வளவு நெல்மணிகள் இருக்கும் என்றார் சீடர்களிடம்.
அம்பாரமாக இருக்கும் என்றான் ஒரு சீடன். முப்பது மரக்காலாவது இருக்கும் என்றான் மற்றொரு சீடன். பல மடங்கு பெருகி இருக்கும் என்றான் சந்தேகம் கேட்ட சீடன். அது எப்படி? பூமியில் அந்த விவசாயி தியாகம் செய்தது ஆறு மரக்கால் விதை நெல்தானே! அந்த அளவே திரும்பக் கிடைப்பதுதானே முறை. கூடுதலாக எப்படிக் கிடைக்கும்? என்றார் குரு. குருவே! அதைத்தான் பூமாதேவியின் அருட்கொடை என்று சொல்வார்கள். ஒன்று போட்டாலும் பத்தாகப் பெருகுவதே விவசாயம் என்றான் அச்சீடன்.
அதைக் கேட்ட குரு, யக்ஞத்தின்போதும் அது தான் நடந்தது. பூமாதேவியின் கருணையால் பெருகிய நெல் போன்று, அக்னியில் பிரதிஷ்டை செய்த நெய்யும் பலவாறாகப் பெருகி, எந்த தேவதைக்கு எவ்வளவு இருந்தால் போதுமோ, எவ்வளவு இருந்தால் பரிபூரண திருப்தி ஏற்படுமோ, அவ்வளவாகப் பெருகும். அக்னியில் நெய் மட்டுமல்ல. வேதத்தையும் சேர்த்தல்லவா வார்த்திருக்கிறோம்! வார்த்த அளவு நெய்தான் தெய்வத்தை அடைந்த தென்றால், பிறகு வேதம் உரைத்ததற்கே பொருள் இல்லாமல் போய் விடுமே என்று வேதத்தின் பெருமைகளை மென் மேலும் விளக்கினார் குரு. |
|
|
|