|
பாண்டவர்களின் வனவாசம் வெற்றிகரமாக முடிந்தது. பாண்டவர் சார்பாக கவுரவர்களிடம் தூது செல்ல கிருஷ்ண பகவான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் துரியோதனனுடைய அரண்மனைக்குச் சென்றார். அப்போது துரியோதனன் கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! தங்களுக்காக அற்புதமான விருந்து தயார் செய்யக் கூறியுள்ளேன். அதில் நீங்கள் கலந்து கொண்டு எங்களைக் கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு கிருஷ்ணர், துரியோதனா! உனது உபசரிப்புக்கு நன்றி. நான் உன்னுடைய விருந்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன் என்றார்.
ஏன்? என பரிகாசத்துடன் துரியோதனன் கேட்க, முதலாவதாக, என்னைத் தலைவனாகவும், இறைவனாகவும் எண்ணி என்னிடம் விசுவாசம் காட்டிவரும் பாண்டவர்களின் மனம் நோகும் படி செய்தவன் நீ. இரண்டாவதாக, என்னையும் எனது பக்தர்களையும் துவேஷிப்பவனுடைய உணவை என்னால் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. மூன்றாவதாக, நீ தர்மங்களைப் பின்பற்றாமல் தவறி நடப்பவன். நான்காவதாக, நான் இப்போது பாண்டவர்களின் சார்பாக வந்திருக்கும் தூதுவன். அதாவது, எதிரிகளின் தூதுவன், ஒரு தூதுவன் காரியம் நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்க வேண்டுமே தவிர, விருந்து, கேளிக்கை போன்றவற்றில் பங்குகொள்வது தர்ம விரோதம் அல்லவா? ஆகவே, நீ தரும் விருந்தை என்னால் ஏற்க முடியாது என்று கூறி முடித்தார்.
நீதியில்லாதவன் தரும் உணவை ஒருவன் சாப்பிட்டால் அவன் செய்த பாவங்கள், உணவு உண்பவரையும் சென்றடைகிறது என்று சாஸ்திரம் சொல்கிறது. |
|
|
|