|
கிருஷ்ணதேவன் என்ற அரசன் பூமியை ஆண்டு வந்தான். அவனது கண்களுக்கு நல்லது மட்டுமே தெரியும். தீய விஷயங்களில் கூட நல்லதையே பார்ப்பான். இவனைப் பற்றி ஒருநாள் தேவலோகத்தில் பேச்சு வந்தது. இந்திரன், கிருஷ்ணதேவனை வானாளவப் புகழ்ந்தான். “மனிதர்களில் கூட தேவநிலைக்கு சிலர் உயர்ந்து விடுகிறார்கள். அவர்களில் ஒருவன் கிருஷ்ணதேவன். அவனைப் போன்றவர்கள் பூமியில் அதிகரித்தால், போட்டி பொறாமைக்கே இடமில்லை. உலகிலேயே அவன் சிறந்த மனிதன்,”என்றான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு தேவருக்கு பொறாமை வந்தது. “இந்திரனுக்கு என்னாயிற்று? கேவலம்... ஒரு மனிதனை தேவர்களுடன் ஒப்பிடுகிறானே! இன்னும், கொஞ்சநாள் அந்த கிருஷ்ணதேவனை பூமியில் விட்டு வைத்தால், அவன் தேவர்களுக்கும் மேலாகி விடுவான். அவனை ஒரு கை பார்த்து விட வேண்டியது தான், என்றபடி பூலோகம் வந்தான்.
நாயாக உருமாறிய அவன், வழியில் அலங்கோலமாக இறந்து கிடப்பது போல் நடித்தான். நாயின் பற்கள் கோரமாக வெளியில் நீட்டிக் கொண்டிருந்தன. அந்த வழியாக கிருஷ்ணதேவன் வந்தான். “பாவம்! இவ்வளவு அழகான பற்களைக் கொண்ட நாய் இறந்து விட்டதே! இந்தப் பற்கள் பளிச்சிடுகிறதே! இதற்கு ஏன் இந்த நிலை வந்ததோ?” என்று எண்ணியபடி நடந்தான். நாயாக கிடந்த தேவன், உணர்ச்சி வசப்பட்டு சுயரூபத்துடன் எழுந்தான். கிருஷ்ணதேவனை அழைத்தான். “அரசனே! உன்னை நான் என்னவோ என நினைத்தேன். இவ்வளவு அலங்கோலமான நிலையில், நடு வழியில் கிடந்தும் கூட, துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு, நல்லதை மட்டும் பார்த்தாய். உண்மையில் நீ நல்லவன். நான் ஒரு தேவன். தேவலோகத்தில் உன்னைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. இந்திரன் உன்னைப் பாராட்டிப் பேசினான். நான் பொறாமைப்பட்டு உனக்கு தொல்லை தர வந்தேன். நீயோ, முதல் தேர்விலேயே தேறி விட்டாய். உன்னிலும் உயர்ந்தவர் உலகில் இல்லை,” எனப் பாராட்டி, இப்பிறப்புக்கு பிறகு நீயும் தேவநிலையை அடைவாய்,” என்று வாழ்த்தி மறைந்தான். |
|
|
|