|
மதுராபுரியில் கிருஷ்ணன் பிறந்த வேளையில், ஆயர்பாடியில் வசித்த நந்தகோபரின் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுப்பதற்கு முன்னதாக, தனக்கு உதவும் பொருட்டு இந்தப் பெண்ணை உருவாக்கினார். அவள் பெயர் மாயா. கிருஷ்ணரின் தாய் தேவகியின் சகோதரன் கம்சன். இவனை அழிப்பதற்கே கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது. அப்போது கிருஷ்ணர் தன் தந்தை வசுதேவரிடம், “என்னை ஆயர்பாடிக்கு கொண்டு செல்லுங்கள். நந்தகோபர் வீட்டிலிருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்,” என்றார். வசுதேவரும் அவ்வாறே செய்தார். அந்தப் பெண் குழந்தை மதுராபுரி சிறைக்கு வந்து சேர்ந்தது. அப்போது கம்சன் வந்தான். வசுதேவர், தேவகிக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தான், கம்சனுக்கு அழிவு என்று விதி இருந்தது. ஆனால், தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதே என்று கம்சனுக்கு குழப்பம். இருந்தாலும், பயம் காரணமாக அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்றான்.
அதன் கால்களைப் பிடித்து தூக்கி வானத்தை நோக்கி வீசினான். அந்தக் குழந்தை எட்டு கைகள், கை நிறைய ஆயுதங்களுடன் மாயசக்தியாக மாறியது. “கம்சனே! உன்னைக் கொல்லப் பிறந்த ஆண் குழந்தை வேறு இடத்தில் இருக்கிறது. நான் மாயசக்தி. என்னாலேயே உன்னைக் கொல்ல முடியும். ஆனாலும், நீ என் கால்களைப் பிடித்து தூக்கி எறிந்தாய். என் திருவடிகளைப் பற்றுபவன், எனக்கு எதிரியாகவே இருந்தாலும் சரி...அவனுக்கு அருளாசி தருவேன். அதனால் நீ பிழைத்துப் போ,” என்று சொல்லி மறைந்தாள். அந்த மாயா சக்திக்கு துர்கா என்றும், காளி என்றும் பெயர் ஏற்பட்டது. இப்போதும் கோயில் கருவறை சுற்றுச்சுவரின் வடபகுதியில் சங்கு, சக்கரத்துடன் கூடிய விஷ்ணு துர்க்கையை காணலாம். இவள் எருமைத்தலை கொண்ட மகிஷாசுரனைக் காலில் மிதித்திருப்பாள். எதிரிக்கு கூட கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. அவளை வழிபட ஏற்ற தினம் விஜயதசமி. துர்கா என்ற சொல்லுக்கு கோட்டை அல்லது அரண் என்று பொருள். ஆம்...அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாப்பாள். |
|
|
|