|
ஒரு முனிவரை நேர்மையாளன் ஒருவன் சந்தித்தான். முனிவரே! நான் நல்வழியில் தான் நடக்கிறேன். ஆயினும் வாழ்க்கையில் படும் கஷ்டங்கள் அதிகம். நன்மை செய்வதும், நல்லதையே நினைப்பதுமான எனக்கு ஏன் இத்தனை துன்பம்? என்று கேட்டான். முனிவர் சிரித்தார். அது உன் முன்பிறவியிலான பயன். போன ஜென்மத்தில் நீ பெரும் கொடுமைக்காரனாக இருந்திருக்கலாம். அதன் விளைவு இப்போது தெரிகிறது, என்றார். பதிலுக்கு அவன்,அந்த ஜென்மத் தவறுக்கு தண்டனை, அப்போதே அல்லவா தர வேண்டும்....! ஆக, இப்போது தீயவனாய் இருந்தாலும், நன்றாய் வாழ்பவர்கள், போன ஜென்மத்தில் நன்மை செய்தவர்கள் என்றல்லவா அர்த்தமாகி விடும்... இது நியாயமா? என்று கேட்டான். உன் வாதம் ஒரு வகையில் வாஸ்தவம், என்ற முனிவர் தொடர்ந்தார். மகனே! மனிதனுக்கு பல பிறவிகள் உண்டு. அவனது மனம் நிலையற்றது. முதல் சில பிறவிகளில் நன்றாய் நடப்பவன், அடுத்து வரும் பிறவிகளில் நல்லவனாயிருக்க உத்தரவாதமில்லை. ஆக, தண்டனைகள் மாறி மாறி வரும். ஆனால், எந்நிலையிலும் எப்பிறவியிலும், நல்லவராய் இருப்பவர் மிகச்சிலரே. அவர்களுக்கு மறுபிறப்பு கிடையாது. பரமனின் பாதமடைவர். இது என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும், என்றார். நேர்மையாளருக்கு இப்போது தெளிவு பிறந்தது.
|
|
|
|