|
நடமாடும் தெய்வமென உலக மக்களால் வணங்கப் படும் காஞ்சி மகாப்பெரியவரின் கருணைக்கு அளவே கிடையாது. அருள் வழங்குவதில் அவர் ஜாதிகளையும் பார்ப்பதில்லை. இதோ, ஒரு உதாரண சம்பவம். பல ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை வேளை. காஞ்சி மடத்தில் விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண் தனது கர்ப்பிணி மகளுடன் மகாப்பெரியவரைக் கண்டு ஆசிபெற வந்தார். அவர்கள் பெரியவருக்கு நமஸ்காரம் தெரிவித்தார். பெரியவர் அவர்களிடம் ஜாடை காட்டி, என்ன ஏதென விசாரித்தார். அந்தப் பெண் பெரியவரிடம், சாமி! என் மகளைக் கட்டிக் கொடுத்து ரொம்பநாளா குழந்தை இல்லே! இப்போ கருத்தரிச்சிருக்கா! அந்தக் கருவைக் காப்பாத்தணும்! அதற்கு சத்துள்ள ஆகாரம் கொடுக்கணும்! அவளுக்கு இனிப்பு, காரமுன்னா ரொம்ப இஷ்டம். கர்ப்பிணிங்க விரும்பினதை கொடுத்தா நல்லதுன்னு சொல்வாங்க. என் புருஷனும் விவசாயக்கூலி தான்! எங்களுக்கு கிடைக்கிற அணா கணக்கு வருமானத்திலே இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க வழியில்லே! என்று கண்ணீருடன் முறையிட்டார். பெரியவர் அந்தப் பெண்களை ஓரிடத்தில் அமரச் சொல்லி விட்டார். பக்தர்கள் திரளாக வந்து பெரியவரைத் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு முதியவர் வந்தார். அவரது கைகளில் மூன்று பெரிய பாத்திரங்கள் இருந்தன. பெரியவா! மடத்திலே வேதம் படிக்கிற மாணவர்களுக்காக இனிப்பு, காரம் சுத்தமா செஞ்சு கொண்டு வந்திருக்கேன். அதை இந்த பாத்திரங்களில் வச்சிருக்கேன், தாங்கள் அனுமதி கொடுத்தா அவர்களிடம் கொடுத்துடறேன், என்றார். பெரியவர், அவரிடம் ஒரு திசையை நோக்கி கைகளை நீட்டினார். அங்கே இரண்டு ஏழைப்பெண்கள் உட்கார்ந்திருந்தது முதியவருக்கு தெரிந்தது. அவங்ககிட்டே கொடுத்துடு, என்றார் பெரியவர். அவரும் அந்த பண்டம் முழுவதையும் அவர்களிடம் ஒப்படைத்தார். சற்று நேரத்தில், பெரியவருக்கு மிகவும் பிடித்தமான தயிர் கொண்டு வந்தார் ஒருவர். (பெரியவருக்கு தயிர் கலந்த அவல் தான் ஆகாரம். அதற்காக பக்தர்கள் தயிர் கொண்டு வருவதுண்டு. ஒவ்வொரு அனுஷம் நட்சத்திரத்தன்றும் இதை நாம் பெரியவருக்கு நைவேத்யம் செய்யலாம்) அந்த பாத்திரத்தையும் அவர்களிடமே கொடுக்கச் சொன்னார் பெரியவர். சற்று நேரத்தில் மடத்திற்கு அடிக்கடி வரும் ஒரு பக்தர் வந்தார். பெரியவர் அவரிடம், உங்கிட்டே பணம் இருக்கா! என்றார். அவர் மடியைத் தடவிவிட்டு ஏதோ கொஞ்சம் தேறும், என்றார். அதை அப்படியே, அதோ உட்கார்ந்திருக்கங்களே அந்த பெண்கள் கிட்டே கொடுத்துடு என்றார். அவரும் பணத்தைக் கொடுத்து விட்டு பெரியவரிடம் வந்தார். எவ்வளவு கொடுத்தே! என்றார் பெரியவர். பெரியவா! அதை நான் எண்ணலே! ஆனால், நாலாயிரம் வரை இருக்கும். இப்போ கவர்மென்ட் ஆஸ்பத்திரி போனாலே அவ்வளவு ஆகுமே! என்றார். நீ தயாளராமன், என்று அவரை பாராட்டினார் பெரியவர். அந்தப்பெண் கண்ணீர் மல்க பெரியவரிடம் வந்து, இனிப்பு, பணம் எல்லாம் தந்துட்டீங்க, என்று கண்ணீர் மல்க நின்றார். பெரியவர் அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினார். |
|
|
|