|
தீராத பிரச்னை என்று ஜோதிடரிடம் சென்றால், உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கு... என்று சொல்லி, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளைச் சொல்வர். அதைப் பற்றிய கதை இது: அங்க தேசத்து அரசர், விதாதாவின் அரசவைக்கு, வருகை புரிந்தார், நாரதர். அவரை வரவேற்று, மரியாதை செய்த அரசருக்கு, ஆசி கூறிய நாரதர், மன்னா... பூவுலகில் செய்த புண்ணியத்தின் காரணமாக, தேவலோகத்தில் இந்திர பதவி பெற்று, இனிமையாக வாழ்கிறார், உன் தந்தை. அறநெறியிலிருந்து தவறாமல், ஆட்சி செய்யுமாறு, உன்னிடம் சொல்லச் சொன்னார்... எனக் கூறினார். பின், அங்கிருந்த அரச குருவான, அசித்தனைப் பார்த்து, அசித்தா... உன் தந்தை நரகத்தில் துயரப்படுகிறார். தான் தேடிய பொருளைப் புதைத்து வைத்த இடத்தை உனக்குச் சொல்லாமல் இறந்து விட்டதாகவும், அப்புதையல், உங்கள் வீட்டு தூணுக்கு அடியில் இருப்பதாகவும், அதை எடுத்து, தானம் செய்யச் சொன்னார்... என்று கூறினார்.
நாரதர் சொற்படியே, விதாதா நன்முறையில் ஆட்சி செய்ய, அசித்தனும், புதையலை எடுத்து, தானம் செய்தார். அதன் காரணமாக, அசித்தனின் தந்தை நரகத்திலிருந்து விடுபட்டு, சொர்க்கத்தை அடைந்தார். பின், ஒருசமயம், விந்திய மலையின் அருகில் உலாவிக் கொண்டிருந்தனர், மன்னர் விதாதாவும், குலகுரு அசித்தனும்! அங்கிருந்த ஆற்றங்கரையில் அந்தணர்கள் பலர் இருந்ததைப் பார்த்த அரசர், குருவின் ஒப்புதலை பெறாமல், அவர்களுக்கு விருந்து படைக்கத் தீர்மானித்தார். அதன்படி விருந்தும் தயாராகியது. ஆனால், வாழைப்பழம் மட்டும் கிடைக்கவில்லை. சிறிது தூரத்தில், கோவிலுக்கு சொந்தமான தோட்டத்தில், வாழைமரங்கள் இருப்பதைப் பார்த்தார், அரசர். உடனே, தன் வீரர்களை ஏவி, அப்பழங்களைக் கொணருமாறு உத்தரவிட்டார். கோவில் தோட்டத்தில் புகுந்த வீரர்கள், பழங்களைப் பறிக்க முயற்சிக்கையில், அங்கிருந்த கோவில் பணியாளர்கள் தடுத்து, இது தெய்வத்திற்காக உள்ள பழங்கள்; இவற்றை பறிக்க யாருக்கும் அனுமதி கிடையாது... என்றனர்.
அதனால், திரும்பி வந்த வீரர்கள், அரசரிடம் நடந்ததை கூறினர்; சினம் மூண்டது அரசருக்கு! அரச கட்டளையை நிறைவேற்ற முடியாத நீங்கள் எல்லாம் வீரர்களா... போய் பலாத்காரமாக வாழைப் பழங்களை பறித்து வாருங்கள்... என்றார், கோபத்துடன்! வீரர்கள் கோவில் தோட்டத்திற்குள் புகுந்து, வலுக்கட்டாயமாக பழங்களைப் பறித்து வந்தனர். விருந்து முடிந்து அரண்மனைக்கு திரும்பினார், அரசர். சில காலம் கழித்து இறந்த அரசர், கோவில் சொத்தை பலாத்காரமாக அபகரித்ததால், நரகம் அடைந்தார். அவர் தந்தையும் நரகத்தை அடைந்தார். பொதுச் சொத்தோ, கோவில் சொத்தோ அதை அபகரிப்போர், அதற்குண்டான தண்டனையிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
|
|
|
|