|
வயதான பெற்றோருக்கு நான் ஒரே மகள். திருப்பதி ஏழுமலையானை வேண்டிப் பிறந்தவள் என்பதால் பத்மாவதி என பெயரிட்டனர். ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்ஸவத்திற்கு சென்று விடுவோம். என் பத்து வயதில் அப்பா காலமாகி விட்டார். அதன் பின் திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பே இல்லை. அம்மா மட்டும் புரட்டாசி விரதமிருப்பார். எனக்கு திருமண வயது வந்ததும், வரன் ஏதும் அமையவில்லை. அம்மா ஒருநாள், பெருமாளே! பத்மாவதி கல்யாணம் சீக்கிரமா நடக்கணும். என் தங்க மோதிரத்தை காணிக்கையா செலுத்துறேன் என வேண்டிக் கொண்டாள். அந்த வருஷமே மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைத்தார். அம்மாவுடன் மலேசியா சென்றோம். சில ஆண்டுகளில் அம்மா காலமானாள். இரு பெண் குழந்தைகளுக்குத் தாயானேன். காலம் ஓடியது. மூத்தவளுக்கு உறவினர் மூலம் தமிழகத்தில் மாப்பிள்ளை தேடினோம். வசதியான இடம் அமைந்தது. மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை திருப்பதியில் நடத்த விரும்பினர். நாங்களும் சம்மதிக்க, திருமண வேலைகள் களை கட்டின. ஒருமாதம் இருக்கும் சூழலில், பெண் ஜாதகம் பொருத்தமில்லை. அதனால் வேண்டாம் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
சம்பந்தம் பேச உதவிய உறவினர் மூலம், இரு குடும்பமும் சேர்ந்து பொருத்தம் பார்க்க முடிவெடுத்தோம். திருப்பதி போனதாகச் சொல்லி அந்த ஜோதிடர், லட்டு பிரசாதம் கொடுக்க, என் பயம் அடியோடுவிலகியது. ஜாதகங்களைஆராய்ந்த ஜோதிடர்,பொருத்தம் இல்லை என்று எவன் சொன்னது.. தாராளமா சேர்க்கலாம் என்றார். கல்யாணம் திருப்பதியில் நடந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமணத் தம்பதியரோடு பெருமாளை தரிசித்து மகிழ்ந்தேன். பெருமாளே! உன் அருளால் கல்யாணம் முடிந்தது. கோடி நமஸ்காரம் என்று வழிபட்டேன்.அதன் பின் காணிக்கை செலுத்த ஆயத்தமானேன். காணிக்கைப் பையில் இருந்த காசுகளை அள்ளிப் போட்டேன். என் கணவரும் உதவி செய்தார். அப்போது அவர் கையில் இருந்த மோதிரம் உள்ளே விழுந்தது. ஆ...! யாரோ மோதிரத்தை இழுப்பது போலிருக்குதே! என்றார் பரபரப்புடன். பத்மா... நம் கல்யாணத்துக்கு உன்அம்மா கொடுத்தது இது! இப்படி உண்டியலில் போயிட்டுதே! என்றார். அதைக் கேட்டதும் அம்மா எனக்காக வைத்த வேண்டுதல் ஞாபகத்திற்கு வந்தது. கணவரிடம் நடந்ததை விவரித்தேன். நெகிழ்ந்து விட்டார்.
|
|
|
|