|
வெறும் காலுடன் தரையில் நடந்தால் சுட்டுப் பொசுக்கும் கோடை காலம் அது. அதுவும் மதிய வெயிலின் உக்கிரம் தாள முடியாது என்பதால், காஞ்சிபுரம் மடத்திற்கு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. பரமாச்சாரியாரைக் கண்குளிரத் தரிசித்த அவர்கள், மோரையும் குடித்து மகிழ்ந்தனர். அந்த நேரத்தில் சிப்பந்தியை அழைத்தார் சுவாமிகள். நீர்மோர் அண்டாவை மடத்தின் வெளியே கொண்டு போய் வை. தாகத்தோடு வரும் எல்லோருக்கும் மோர் கொடுத்து உபசரி!சூ என்று உத்தரவிட்டார். எதற்காக மோர் உபசாரத்தை மடத்தின் வெளியே நிகழ்த்தச் சொல்கிறார் பரமாச்சாரியார் என சிப்பந்திக்கு புரியவில்லை. அண்டாவை மடத்தின் வெளியே வைத்து விட்டு, இந்த வெய்யிலில் யார் வருவார்கள் என யோசனையுடன் காத்திருந்தார் சிப்பந்தி. அப்போது மடத்தின் வழியாக, கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
தாகத்தில் இருந்த ஒருவர், ஒரு தம்ளர் மோர் வாங்கிக் குடித்து விட்டு ஊர்வலத்தைப் பின் தொடர்ந்தார். அவரைப் பார்த்த பலரும் அடுத்தடுத்து மோர் வாங்கி குடித்தனர். மாலை நேரத்தில் சிப்பந்தியை அழைத்து என்ன நடந்தது என விசாரித்தார் சுவாமிகள். கடவுள் மறுப்பு ஊர்வலத்தினர் பலர் மோர் குடித்த விபரத்தைச் சொன்னார் சிப்பந்தி. சுவாமிகள், கொள்கை காரணமாக அவர்கள் மடத்திற்குள் வரத் தயங்குவர். அதற்காகவே, மோர் அண்டாவை மடத்திற்கு வெளியே வைக்கச் சொன்னேன். கொள்கை எதுவானால் என்ன? எல்லோரையும் வெயில் தாக்கத் தானே செய்யும்? அவர்களும் மோர் குடித்து, தாக சாந்தி பெற வேண்டுமல்லவா? என்றார். கொள்கையை விட, மனிதாபிமானமே உயர்வானது என்பதை நிரூபித்த மகாபெரியவர், தாகம் தீர்க்க வந்த மேகமாக காட்சியளித்தார். -திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|