|
கவிச்சக்கரவர்த்தி கம்பர், காளி கோயிலில் பூஜை செய்யும் குலத்தில் தோன்றியவர் என்று சொல்லப்படுகிறது. அவருக்குப் படிப்பு வராததால் கம்பங்கொல்லை காவலுக்குப் போ என்றனுப்பினார் ஆசிரியர். சோழ நாட்டில் வயிரபுரம் என்ற கிராமத்தில் வளமான வயல்வெளியின் நடுவே காளி கோயில் ஒன்று இருந்தது. பழைய அமுதை வயிறு முட்ட உண்ட சிறுவன், கம்பன், வரப்பில் படுத்து நன்றாக உறங்கினான். அப்போது அப்பகுதியை ஆண்ட சிற்றரசன் காளிங்கராயன் என்பவனின் குதிரை, கம்பங் கொல்லையில் புகுந்து பயிரை மேய்ந்தது. உறக்கத்திலிருந்து கம்பன் கனவில் இதைக் காட்டினாள் காளிதேவி. அரண்டு விழித்த கம்பன், குதிரையை விரட்டினான். அந்தப் பொல்லாத குதிரையோ அவனை விரட்டியது. பதறி ஓடிய சிறுவன், காளியன்னையைச் சரணடைந்தான். காளியம்மன் தன் பீஜமந்திரத்தை கம்பன் நாவில் எழுதினாள். அவ்வளவுதான்!
வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே கேள் காய்த்த தினைப்புனத்துக் காலை வைத்துச் சாய்த்துக் கதிரை மாளத்தின்ற காளிங்கராயன் குதிரை மாளக் கொண்டு போ....
என்று பாடினான் சிறுவன், கம்பீரமாய் நின்று கதிரைத் தின்று கொண்டிருந்த குதிரை அக்கணமே கீழே இறந்து சரிந்தது. விஷயம் பரவியதும் ஆசிரியர் பதறியடித்து வந்தார். காளியங்கராயன் பொல்லாதவனாயிற்றே, தண்டனை தருவாரே என்று கலங்கினார். கம்பன் உடனே பாடலின் நான்காவது வரியை மட்டும் மாற்றி, மீளக் கொண்டு வா என்று பாட, குதிரை பிழைத்தெழுந்து லாயத்துக்கு ஓடியது. கம்பரின் இராமாயணம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற வேண்டுமானால் அம்பிகாபதியின் கையொப்பமும் வேண்டும் என்று சொல்லப்பட்டது. அம்பிகாபதியை வரவழைத்தார் கம்பர். இதில் எனக்கென்ன லாபம்? என்று கேட்டான் அம்பிகாபதி. நான்கு அதிசயமுண்டு. கண்டுபிடி பார்ப்போம். அவை சளசள, களகள, கொள கொள, கிளு கிளு என்றார் கம்பர். பொறுமையைõய்ப் படித்த அம்பிகாபதி, பால காண்டத்தில் திரு அவதார படலத்தில் ரோமபாத மகாராஜனுடைய நாட்டுக்குள் ரிஷியசிருங்கர் காலடி வைத்தபோது, ஒரு மாமாங்கமாய் மழை பெய்யா திருந்த நாட்டில் கார்மேகங்கள் வானில் கூடி சளசள வென்று மழை பொழிந்ததாம் என்றறிந்து சொன்னான். அடுத்த பாலகாண்டத்திலேயே பண்டாட்டு படலத்தில், சீதா கலியாணத்துக்குப் புறப்பட்டுச் சென்ற தசரதரின் சேனையில் - இரண்டு பெண்டாட்டிக்காரன் ஒருவன் - இளையவளை வீட்டில் விட்டுவிட்டு மூத்தவளோடு போகிறான். வழியில் ஒரு சோலையில் மதுவுண்டு போதையில், இளையாள் பெயரைச் சொல்லி மூத்தானைக் கூப்பிட்டான். அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் புருஷன் மது மயக்கத்திலும் அவளை மறக்கவில்லையே என்று துக்கத்தில் கண்ணீரும் களகளவென்று கொட்டியது என்றிருக்கிறீர்கள் என்றான்.
மூன்றாவதாக யுத்தகாண்டத்தில் ராமர், வருணன் வரவில்லை என்று கோபம் கொண்டு சமுத்திரத்தின் மேல் அக்னியஸ்திரப் பிரயோகம் செய்தார். அதில் கடலும் கொதித்ததாம்! சிவபெருமானது ஜடா முடியிலுள்ள கங்கையும் கொதித்தாள். பிரம்மாவின் கமண்டல கங்கையும் கொளகொளவென கொதித்த தாம் என்றான் அம்பிகாபதி. நான்காவதாக கும்பகர்ணன் வதைப் படலம். இராவணன் அசோகவனத்தில் இருக்கையில் கும்பகர்ணன் மடிந்தான். என்ற தகவலை சுகசாரணர் ஓடிவந்து சொன்னார். உடனே, தன் குரலோசை வானமளவும் எட்டும்படி அழுதானாம். இதைக் கண்டு ஜானகி, மயிற்கூச்செரிய மனத்துள் கிளுகிளுத்தாளாம். நீங்கள் அதிசயமான கவிதான். ராமாயணம் முற்றிலும் தந்திரமாகப் படிக்க வைத்த தங்கள் செயலும் ஐந்தாவது அதிசயம் என்று சாற்று கவி எழுதிக் கொடுத்தானாம் அம்பிகாபதி! |
|
|
|