|
முற்பிறவியில் செய்த பாவம் இப்பிறவியில் தொடருமா? பெற்றவர் செய்த பாவம் பிள்ளையாய்ப் பிறக்குமா? போன்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் அழகாக பதிலளிக்கிறார். மேலும் திருதராஷ்டிரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள் பிறந்தன என்பதையும் விளக்குகிறார்.... குருக்ஷேத்திரப் போர் முடிந்து, தர்மபுத்திரருக்கு முடிசூட்டு விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது திருராஷ்டிரன் கிருஷ்ணரிடம். கண்ணா, நான் பிறவியிலேயே குருடனாக இருந்த போதிலும் விதுரர் சொல் கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேனே. அவ்வாறு இருக்கும்போது என் நூறு புதல்வர்களும் ஒருவர் கூட மீதம் இல்லாமல் இழந்து போகும்படி, நான் செய்த பாவம் என்ன? எனக்கு விளக்குவாயா? என்று கேட்டான். கண்ணன் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு ஒரு கதை சொல்கிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ அதற்கு பதில் சொன்னால் நான் உன் சந்தேகத்திற்கு பதில் சொல்கிறேன் என்றார் பகவான்...
நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். நல்ல சுவையாகச் சமைப்பது மற்றும் அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது போன்ற காரணங்களால் விரைவில் தலைமை சமையல் கலைஞனாக பதவி உயர்வு பெற்றான். அப்போது சமையல்காரனுக்கு அரசனிடம் மேலும் பரிசு பெற வேண்டும் என்ற பேராசையால் விபரீத எண்ணம் தோன்றியது. அதன்படி அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாகச் சமைத்து அரசருக்குப் பரிமாறினான். தான் சாப்பிடுவது எது என்று தெரியாமல் அந்த உணவின் சுவையில் மயங்கிய மன்னன், அதை விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதைச் சமைக்கவும் கட்டளை இட்டு சமையல்காரானுக்குப் பரிசும் அளித்தான். திருதராஷ்டரா, இப்போது சொல் அரசன், சமையல்காரன் இருவரில் அதிகம் பாபம் செய்தவர் யார்? திருதராஷ்டிரன் சிந்தித்து, ஒரு முறை வசிஷ்டரின் சமையல்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை முனிவருக்கு வைத்து விட்டான். ஞான திருஷ்டியில் அதைக் கண்டுபிடித்த முனிவர் சமையல்காரனுக்கு சாப மிட்டார். அந்த விவேகமும், எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே!
சமையல்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான், அதனால் அவன் தவறு சிறியது. ஆனால் பல நாட்கள் இப்படியோர் உணவை உண்டும் அதைக் கண்டு பிடிக்காத அரசன் தான் அதிகம் தவறிழைத்தவன் ஆகிறான் என்றார் திருதராஷ்டிரன். புன்னகை புரிந்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஒரு அரசனாக இருந்தும் நியாயம் தவறாது மன்னவன் செய்ததே தவறு என்று கூறினாய். இந்த நீதிபரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், விதுரர் போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது. நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது. சற்று முன் நான் சொன்ன கதை உன்னுடைய கதைதான். முற்பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகத் தின்றாய். அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்து கொள்கிறாய். ஆனால் நீ முற்பிறவியில் அரசனாக இருந்தபோது தினம் தினம் கண்ணால் பார்த்து உண்டும், நல்ல உணவு, பாபகரமான உணவுகளுக்குக்கிடையே வேறுபாடு தெரியவில்லை. அப்புறம் உனக்குக் கண் எதற்கு? ஆகையால் நீ குருடனானாய். தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது. அவரவர் வினைக்கேற்ப அவரவர் வாழ்வு அமையும்! என்றார் கிருஷ்ணர். தன்வினையே தன்னைச் சுட்ட தென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான். |
|
|
|