|
விவசாயி ஒருவருக்கு மலை அருகே ஒரு தோட்டமிருந்தது. அதில் துளசிச் செடிகள் பயிர் செய்து இருந்தார். வாரத்துக்கு ஒரு முறை துளசிச் செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் போன்றவற்றைப் பிடுங்கி எடுத்து, துளசிச் செடிகளை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வளர்த்து வந்தார் அவர். ஒரு நாள் துளசிச் செடிக்கு, இடையே வளர்ந்து இருந்த முட்செடி ஒன்றைப் பிடுங்கி எறிந்தபோது, அந்த முட்செடி கண்ணீர் விட்டு அழுதது. உடனே அவர் அந்தச் செடியை எடுத்துக் காரணம் கேட்டார். அது, “என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எந்தத் திறமையும் இல்லாத என்னை ஏன் கடவுள் படைத்தார்?” என்று கூறி வருத்தப்பட்டது. அதன்மேல் பரிதாபப்பட்ட அவர் பரிவுடன் அதனிடம், “கண் கலங்காதே... கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை. எல்லோருக்கும் திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்” என்றார்.
அவரது பதிலில் திருப்தி அடையவில்லை அந்த முட்செடி, “ஹூம்... என்னிடம் என்ன திறமை இருக்கப் போகிறது? நானோ முட்செடி, பிறரை காயப்படுத்துவேனே தவிர, வேறு எந்த பிரயோஜனமும் என்னால் யாருக்கும் இல்லை ” என்று சலித்துக்கொண்டது. கொஞ்சம் யோசித்த அந்த விவசாயி, தன் தோட்டத்திலிருந்து பிடுங்கி எறிந்த முட்செடிகளை எல்லாம் எடுத்து, சேர்த்துக் கட்டி, தோட்டத்தைச் சுற்றி வேலி போன்று அமைத்தார். பின்னர் அந்த முட்செடியிடம், “ நீ முட்செடிதான். பிறரைக் காயப்படுத்து பவன்தான்... ஆனால் உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது. அதோடு பலமும் இருக்கிறது. அதாவது உன்னைக் கடக்க நினைக்கும் எவரையும் நீ தடுத்து நிறுத்துவாய். அதனால்தான் இப்போது இந்தத் தோட்டத்தையே பாதுகாக்கும் காவல்காரவேலியாக உயர்ந்திருக்கிறாய்!” என்றார்.
அதைக் கேட்ட முட்செடி சந்தோஷமாகத் தலையசைத்தது. முக நூலில் இந்தக் கதையைப் படித்தபோது, ‘கடவுள் எல்லா உயிர்களையுமே ஏதாவது ஒரு திறமையையும் அதனைச் செய்வதற்கான பலத்தையும் வரமாகத் தந்துதான் படைக்கிறார். எனவே நமக்குள்ளும் அப்படி ஒரு திறமை நிச்சயம் மறைந்திருக்கும். அதை நாம்தான் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்! என்றே எனக்குத் தோன்றியது. இறைவன் கொடுத்திருக்கும் வரமாக, உங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் திறமையைக் கண்டுபிடியுங்கள்! வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும். ஆனந்தம் பிறக்கும்! |
|
|
|