|
விதர்ப்ப மன்னன் ருக்மாங்கதன் மக்கள் மனம் வாடாமல் ஆட்சி செய்தான். அவனுடைய மகன் தர்மாங்கதன் நந்தவனம் ஒன்றை அமைத்தான். அதன் அமைதியைப் பார்த்த ஒரு முனிவர், அங்கே தவமிருந்தார். அங்கு பூக்கள் குறையத் துவங்கின. முனிவர் தான் மலர்களைப் பறித்திருப்பார் என்றெண்ணி அவரை மன்னன் முன் நிறுத்தினர். ருக்மாங்கதன் அதிர்ந்தான். முனிவரை திருடனாகக் கருதிய காவலர்களைக் கடிந்தான்.. முனிவரிடம் மன்னிப்பு கேட்டான். அவனுடைய சொற்களால் மனம் நிறைந்த முனிவர், ருக்மாங்கதா! கொம்மட்டி விதைகளை தோட்டத்தில் ஆங்காங்கே தூவு. மலரைப் பறிப்பது யார் என்று புரியும் என்று யோசனை சொன்னார். முனிவர் சொன்னபடியே செய்தான் மன்னன். விதைகள் முளை விட்டன. கொடியாகிப் படர்ந்தன.
மரங்களிலும், செடிகளிலும் பரவித் துளிர்த்தன. ஒருநாள் அங்கே, பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். விபரம் அறிந்த மன்னன் அங்கு விரைந்தான். மன்னரை கண்ட அவள், மன்னா! நான் தேவலோகத்தை சேர்ந்தவள். விஷ்ணு பூஜைக்காக தினமும் மலர்களை நானும், என் தோழிகளும் தான் பறித்துச் சென்றோம். இன்று என் காலில் இந்த கொடி சுற்றியது. ஏகாதசி விரதத்தின் பலனை எவரேனும் தானமாக தந்தால், நான் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும் என்றாள். அரண்மனை சமையல்காரி தன் ஏகாதசி விரத பலனை அவளுக்கு கொடுத்தாள். தேவலோகப்பெண் விடுபட்டாள். |
|
|
|