|
குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே... என்பர். மதுரைக்கு அருகிலுள்ள சமய நல்லுாரில், ராமசாமி - திரிபுரசுந்தரி எனும் அந்தண தம்பதி வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகள் கடந்தும், மகப்பேறு இல்லாததால், மதுரை மீனாட்சியம்மனை வேண்டினர். ஒரு நாள், அவர்கள் வீட்டு வாசலில் ஒரு மரப்பாச்சி பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர், இரு குழந்தைகள். அவர்கள், திரிபுரசுந்தரியிடம் பொம்மையை கொடுத்து, இதை பத்திரமாக வைத்திருங்கள்; நாங்கள் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறோம்... என்று சொல்லி, ஓடி விட்டனர். யார் இவர்கள்... என யோசித்தபடி, அந்த மரப்பாச்சி பொம்மையை உற்றுப் பார்த்தார், திரிபுரசுந்தரி. பொம்மையின் அடிப் பாதத்தில், சங்கு, சக்கர ரேகை காணப்பட்டது. அதனால், ஒன்றும் புரியாமல் கணவரிடம் பொம்மையை காட்டினார். ஜோதிடத்தில் நிபுணரான ராமசாமி, அப்போதே பிரசனம் போட்டு பார்த்தார். அம்பாளின் அருளால், நீ இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகப் போகிறாய்; அவற்றில் ஒன்று தெய்வாம்சம் பொருந்தியது. அக்குழந்தையின் பாதங்களில், இதேபோல, சங்கு, சக்கர ரேகைகள் இருக்கும்... என்றார், ராமசாமி.
அதனால், அந்த மரபாச்சி பொம்மையை பூஜிக்க துவங்கினார், திரிபுரசுந்தரி. ஒருநாள், மரப்பாச்சி பொம்மைக்கு பொரி நைவேத்யம் செய்து, பூஜை செய்து கொண்டிருந்தார். அவ்வேளையில், வாசலில் குழந்தைகள் வரும் ஓசை கேட்கவே, அவர்களுக்கு பொரி கொடுப்பதற்காக வாசல் பக்கம் சென்றார், திரிபுரசுந்தரி. அங்கே, பொம்மை தந்து சென்ற அந்த இரு குழந்தைகள், அம்மா... நாங்கள் தந்த பொம்மையை திருப்பி தாருங்கள்... என்று கேட்டனர். திரிபுரசுந்தரி, உள்ளே வந்து பார்த்தார், அங்கே பூஜையில் வைக்கப்பட்டிருந்த பொம்மையை காணவில்லை. குழந்தைகளோ பொம்மையை கேட்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். செய்வதறியாமல், அம்பாளை தியானிக்க, பொம்மை, அவர் அருகில் இருந்தது. ஆச்சரியத்தோடு பொம்மையை எடுக்க, பொம்மையிலிருந்து தெய்வீக மணம் வீசியது. பொம்மையை கீழே வைத்த திரிபுரசுந்தரி, குழந்தைகளை பார்ப்பதற்காக வாசலுக்கு ஓடினார். ஆனால், அங்கே குழந்தைகள் இல்லை; மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்து பார்த்த போது, நறுமணம் கமழ்ந்த பொம்மையையும் காணவில்லை. அப்போது தான், குழந்தைகளாக வந்திருந்தவர்கள், மீனாட்சி - சுந்தரேசர் என்பதை, திரிபுரசுந்தரியும், அவர் கணவரும் உணர்ந்தனர். பிறக்கக் கூடிய குழந்தை, தனக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டிய, தெய்வீக அம்சம் கொண்ட குழந்தை என்பதை அடையாளப் படுத்தவே, சங்கு, சக்கர ரேகை கொண்ட பொம்மையை தந்து, தெய்வம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு அவதரித்த அக்குழந்தை தான், மீனாட்சி புத்திரன் என்று புகழ்ந்து துதிக்கப்பட்ட ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள்! |
|
|
|