|
யாதவ மன்னனான சூரசேனனின் மகள் பிருகை. சூரசேனனின் அத்தை மகன் குந்திபோஜன். அவன் ஒருமுறை சூரியனுக்கு யாகம் நடத்த, அதில் பங்கேற்க பிருகை சென்றாள். அவளது பணிவிடைகளைக் கண்ட குந்திபோஜன், பிருகையைத் தன் மகளாக வளர்க்க விரும்பினான். சூரசேனனும் புறக்கணிக்க முடியாமல் தத்து கொடுத்தான். அதன் பின் பிருகைக்கு “குந்தி” என்று பெயர் உண்டானது. குந்தி ஒரு சமயம் துர்வாசரின் வேண்டுகோளுக்காக அவருக்கு பணிவிடை செய்ய நேர்ந்தது. குந்தியின் சாந்தம் கண்ட முனிவர் வாழ்த்தியபோது, அவரது உள்ளுணர்வு உறுத்தியது. “சாபத்தால் இவளுக்கு குழந்தைப்பேறு உண்டாகாது” என்பதை அறிந்தார். அதனால், “மகளே! நான் சொல்லும் மந்திரத்தை கற்றுக் கொள். இதன் மூலம் நீ எந்த தேவரை அழைத்தாலும், அவர் உன் முன் நிற்பர். அவரது அம்சமான புத்திரன் உனக்கு பிறப்பான்” என வரமளித்தார். விடை பெற்ற குந்தி, விளையாட்டாக சூரிய தேவரை எண்ணியபடி மந்திரம் ஜபிக்க, கோடி பிரகாசத்துடன் அவள் முன் தோன்றினார். சூரியனை வணங்கிய குந்தி, மந்திரத்தை விளையாட்டாக சொன்னதாக தெரிவித்தாள். “நீ சொன்னது புத்திர பாக்கியம் தரும் மந்திரம். எனவே, குழந்தையை அளிக்காமல் என் உலகிற்கு திரும்ப முடியாது. இருப்பினும், குழந்தை பெற்றதும் நீ கன்னியாக மாறி விடுவாய்” என்று சொல்லி மறைந்தார். அந்த குழந்தையே சூரிய புத்திரனான கர்ணன். கவசம், காதில் குண்டலத்துடன் பிறந்ததால் “கர்ணன்” என்ற பெயர் பெற்றான். இல்லாதவர்களுக்கு வாரி வழங்கியதால் கொடை வள்ளல் என பெயர் பெற்றான். |
|
|
|