|
நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு, பித்ரு தோஷமும் ஒன்று! அதை, சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதாலேயே, அது, சிரார்த்தம் எனப்பட்டது. சிரார்த்தத்தை சரிவர செய்தால், வாழ்வில் நன்மையும், அமைதியும் ஏற்படும் என்பதை விளக்கும் கதை இது:
கோதாவரி நதிக்கரையில், போகவதி என்னும் நகரத்தை ஆட்சி செய்து வந்தார் மன்னர், தேவவர்மா. அவருக்கு சுச்சோதிகன், நீதிமுகன், வதான்யன், தேவாமித்திரன் என, நான்கு புத்திரர்கள். நல்லமுறையில் ஆட்சி செய்து வந்த தேவவர்மா, முதுமையின் காரணமாக, தன் மூத்த புத்திரனான சுச்சோதிகனுக்கு முடிசூட்டி, தவம் செய்வதற்காக, மனைவியுடன் கானகம் சென்று, பின், தன் இல்லாளுடன் இறைவனடி சேர்ந்தார். அதனால், தன் சகோதரர்களுடன் சேர்ந்து, இறுதிச் சடங்குகளை செய்தார், சுச்சோதிகன். அப்போது, அங்கு வந்த நாரதர், மன்னா... முன்னோர்களுக்கு நீ செய்யும் இறுதிச் சடங்கில் மகிழ்ந்து, உன் பித்ருகள் உனக்கு காட்சியளித்து, ஆசிர்வாதம் செய்யும் செயல் எங்கு நிகழ்கிறதோ, அது உத்தமமான திருத்தலம்; அங்கு செல்வாயாக... என்று சொல்லிச் சென்றார். அதனால், சிறு படை மற்றும் புரோகிதருடன் தல யாத்திரை புறப்பட்டார், சுச்சோதிகன்.
ஆங்காங்கே தீர்த்தங்களில் நீராடி, செய்ய வேண்டியவைகளையெல்லாம் செய்தார். ஆனால், நாரதர் சொன்னபடி நடைபெறவே இல்லை. நாரதர் சொன்னதைப் போலவே செய்தும், இதுவரை பித்ருக்கள் காட்சி தரவேயில்லையே... நாரதர் சொன்னது பொருளற்று போய் விட்டதே... என, எண்ணி, மனம் கலங்கினார், சுச்சோதிகன். அப்போது, அவர் எதிரில் தோன்றிய நாரதர், மன்னா... என் வார்த்தைகள் பொருளற்றதல்ல; இதோ, அருகில் இருக்கும் திருப்பூவனம் திருத்தலத்திற்கு செல்; அங்கே, நான் சொன்னது நடக்கும்... என்று கூறி மறைந்தார். நாரதர் சொன்ன திருத்தலத்தை அடைந்தார், அரசர். நீராடி, பித்ருக்களுக்கு உண்டானவைகளை சிரத்தையோடு செய்து முடிக்க, பித்ருக்கள் அவருக்கு மட்டும் தெரியும்படி தோன்றி, சுச்சோதிகா... சிரத்தையுடன் நீ செய்தவைகளை ஏற்றோம்; நலம் பெறுவாய்... என வாழ்த்தி, மறைந்தனர். நாடு திரும்பிய சுச்சோதிகன், தான் நலம் பெற்றதோடு, குடிமக்களையும் நன்கு பரிபாலித்தார். முன்னோர் வழிபாட்டை முனைப்புடன் செய்வோம்; பித்ரு தோஷம் நீங்கி, துயரங்கள் விலகும். |
|
|
|