|
இளைஞன் ஒருவன் புத்தரிடம் சீடனாக சேர்ந்தான். அவன் கடும் பயிற்சிகளில் ஈடுபடுவதை புத்தர் கவனித்தார். அவனுக்கு உபதேசம் புகட்ட எண்ணினார். ஒரு முறை சீடனின் அறையில் வீணை ஒன்று இருக்க கண்டார். “சீடனே! இந்த வீணையை இசைக்க என் மனம் ஆசைப்படுகிறது. மீட்கலாமா..”என்றார். “தாங்கள் மீட்டிட இந்த வீணை என்ன புண்ணியம் செய்ததோ புத்த பிரானே! தங்களின் திருக்கரங்கள் இசைப்பதை கேட்க ஆவலாக இருக்கிறேன்“ என்றான்.
புத்தர் வீணையை எடுத்து அதன் நரம்புகளை முறுக்கேற்றினார். ஒரு கட்டத்தில் புத்தர் திருகுவதை தடுக்க எண்ணி, “இப்படி முறுக்கினால் நரம்பு அறுந்து விடுமே!” என்றான். “அப்படியா...” என்ற புத்தர் நரம்புகளை தளர்த்த ஆரம்பித்தார். அது அளவுக்கு அதிகமாக தொய்ய ஆரம்பித்தது. “எம்பிரானே! இப்படி செய்தால் வீணையை நீங்கள் இசைக்க முடியாது” என்றான். மீண்டும் புத்தர் வீணையின் நரம்பை முடுக்கி இசைக்க, இனிய நாதம் எழுந்தது. அப்போது புத்தர், “சீடனே! இந்த வீணை போல நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும் வாழ்வின் தத்துவம் புதைந்து கிடக்கிறது. நரம்பை அதிகம் முறுக்கினால் அறுந்து விடும். தளர்த்தினால் ஒலி எழும்பாது. இதுபோல, கடும் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் அதன் சக்தியை இழந்து விடும். தொடர்ந்து வேலை செய்ய முடியாது. குறைவாக உழைத்தாலோ, சோம்பலுக்கு இடமாகி விடும். எனவே, புத்தியுடன் செயலில் ஈடுபட்டால் நன்மை கிடைக்கும்” என்றார். |
|
|
|