|
மருதுபாண்டிய மன்னர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சிவன் கோயிலுக்கு புதிய தேர் செய்ய உத்தரவிட்டார். தச்சர்கள் மரம் தேடி அலைந்தனர். சிவகங்கை சமஸ்தானத்திற்குரிய திருத்தலமான பூவணநாதசுவாமி கோயிலில் ஒரு மருத மரம் இருந்தது. தேர் செய்வதற்கு அதை வெட்ட முடிவெடுத்து ஆட்களும் வந்தனர். மரத்தை வெட்ட அர்ச்சகருக்கு மனமில்லை. “மன்னரின் மீது ஆணை! இந்த மரத்தை யாரும் வெட்டக்கூடாது” என கத்தினார் அர்ச்சகர்.
பணியாளர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். விஷயமறிந்த மன்னருக்கு கோபம் வந்தது. “என் கட்டளையை மீறும் அதிகாரம் அர்ச்சகருக்கு எப்படி வந்தது” என விரைந்தார். மன்னரின் வருகையை அறிந்த அர்ச்சகர், சிவனை வணங்கி விட்டு, “மன்னா! உங்களை போலவே இந்த மருத மரமும் குளிர்ந்த நிழல் கொடுக்கிறது. இதன் நிழலில் தங்கும் போதெல்லாம் தங்களின் நல்லாட்சியே நினைவிற்கு வருகிறது. அதனால் தான் மரத்தை வெட்ட மனமில்லை,” என்றார். மன்னரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவரை பாராட்டிய மன்னர், பரிசளித்து விட்டு புறப்பட்டார். மன்னரிடம் விருது பெற்றது போல அர்ச்சகர் மனம் மகிழ்ந்தார்.
|
|
|
|