|
“சிவபெருமானே! பக்தர்களில் சிலர் வாழ்வில் ஒரு முறையாவது, கைலாய யாத்திரை வந்து புண்ணியம் தேடுகின்றனர். சிலர், காசி வந்து கங்கையில் நீராடி, உன்னை தரிசித்து நன்மை அடைகின்றனர். ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாத நிலையில் உலகில் பலர் இருக்கிறார்களே.... அவர்களின் கதி என்னவாகும்?” என கேட்டாள் பார்வதி. ”பூலோகத்திற்கு போனால் தான் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்,” என்ற சிவன், அவளுடன் காசி வந்தார். இருவரும் தங்களை முதியவர்களாக உருமாற்றி கொண்டனர். தள்ளாடியபடி, விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் நின்றனர். கிழவருக்கு மூச்சு இறைக்க கண்கள் படபடத்தன. தடுமாறி கீழே விழுந்தார். மூதாட்டி அவரை தாங்கி பிடித்து, மடியில் படுக்க வைத்து, போவோர் வருவோரிடம், “என் கணவர் உயிர் பிரியும் நிலையில் இருக்கிறார். தவிக்கும் அவருக்கு கொஞ்சம் கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ஊற்றுங்களேன்....... வயதான என்னால் எழுந்து போக முடியவில்லை...” எனக் கெஞ்சுவது போல நடித்தாள்.
யாரும் உதவவில்லை. சூரியன் மறைந்து இருள் பரவியது. கங்கையில் நீராடுவோர் எண்ணிக்கை குறைந்தது. திருடன் ஒருவன் தன் களைப்பு தீர கங்கையில் நீராட வந்தான். முதியவரின் நிலை கண்டு இரக்கம் கொண்டான். இருப்பினும் மனதிற்குள், ‘காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, கைது செய்து விடுவார்களே’ என்ற பயம் மேலிட்டது. இருந்தாலும், தன் கைகளால் கங்கை தீர்த்தத்தை மொண்டு வந்து, முதியவரின் வாயில் ஊற்றப் போனான். “தம்பி.... என் கணவரின் உயிர் பிரியப் போகிறது. அதனால், உன் வாழ்வில் செய்த நற்செயல் ஏதேனும் ஒன்றை எண்ணியபடி, இந்த தீர்த்தத்தை விடு!” என்றாள் மூதாட்டி. நற்செயல் ஏதும் அவன் வாழ்வில் செய்யாதவன் என்பதால், எதுவும் நினைவுக்கு வரவில்லை. அதே சமயம் பொய் சொல்லவும் அவன் விரும்பவில்லை.
“அம்மா! நான் இதுவரை நற்செயல் செய்தது கிடையாது. தீமை நிறைந்த என் வாழ்வில், முதல் முறையாக இன்று தான் இரக்கம் கொண்டு நற்செயல் செய்ய வந்தேன். இதை நினைத்தபடியே தீர்த்தம் கொடுக்கிறேன்,” என்று ஊற்றினான். அடுத்த நொடியில் இருவரும் சிவபார்வதியாக உருமாறி நின்றனர். “ இளைஞனே! இன்று முதல் உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. வாழ்வின் இறுதியில் நீ மோட்ச கதியும் பெறுவாய். மனதில் இரக்கமும், கையில் புனித தீர்த்தமும், நாவில் சத்தியமும் கொண்ட உனக்கு எப்போதும் இறையருள் துணை நிற்கும்” என கூறி மறைந்தனர். காசி போவதை விட, கைலை தரிசனத்தை விட, ஒரே ஒரு நல்ல செயல் செய்தால் சிவபார்வதி அருள் கிடைக்கும். |
|
|
|