|
குருநாதர் தன் சீடர்களிடம், “சிஷ்யர்களே... மனித வாழ்வு நிலையானதல்ல. கடவுள் மட்டுமே நிலையானவர். அதை உணர விரும்பினால் மூன்று வழிகள் உள்ளன. சிவனின் திருநாமத்தை பக்தியுடன் சொல்லுங்கள். தவ வாழ்வில் ஈடுபடுங்கள். சிவத்தலங்களை தரிசியுங்கள் ” என்றார். அதை ஏற்றுக் கொண்ட சீடர்கள், குருநாதருடன் யாத்திரை செல்ல முடிவெடுத்தனர். பரஞ்சோதி என்பவர் மட்டும் வர மறுத்து விட்டார். “பரஞ்ஜோதி.... நீ மட்டும் ஏன் மறுக்கிறாய்?” “நான் தான் ஏற்கனவே வாழ்வு நிலையானதல்ல என புரிந்து கொண்டு விட்டேனே... பிறகேன் வர வேண்டும், ” என்றான். “அதெப்படி முடியும்? உனக்கு பக்குவம் வரவில்லையே!” “குருவே! நான் சொல்வதை நம்புங்கள்”, என பிடிவாதமாக மறுக்க, குருநாதர் கிளம்பினார். ஆஸ்ரமத்தில் பரஞ்ஜோதி மட்டும் தனித்திருந்தான். ஒரு வாரம் கழிந்தது. அழகிய பெண் அங்கு வந்தாள். அவள் அழகில் மயங்கிய பரஞ்ஜோதி, “உன்னை திருமணம் புரிய விரும்புகிறேன்” என காதல்மொழி பேசினான். அவ்வளவு தான்... அப்பெண்ணும் பதிலுக்கு பலமாக சிரிக்க, ஆண்குரல் ஒலித்தது. குருநாதரே கன்னிப்பெண்ணாக வந்திருப்பது தெரிந்தது. “பரஞ்ஜோதி.... உலகம் ஒரு மாயாபஜார். இங்கு விலை போகாத மனிதர்கள் யாருமில்லை, என்னுடன் வா” என்றார். பரஞ்ஜோதியும் புறப்பட்டான். |
|
|
|