|
ஷேர்ஷாஹ் சூரி என்ற மன்னர் இந்தியாவை ஆட்சி செய்த நேரம். அவரது மகன், ஒரு பெண்ணின் மீது வெற்றிலை பீடாவை விளையாட்டாக எறிந்தான். அந்தப் பெண்ணின் கணவனுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. மன்னரிடம் வந்து, அவரது மகன் பற்றி முறையிட்டார். மன்னர், இளவரசனை அழைத்தார். “இதோ பார்! நீ செய்திருப்பதை கடுமையான குற்றமாக எடுத்துக் கொள்கிறேன். மக்கள் செய்வதை விட, இளவரசனாகிய நீயே குற்றம் செய்திருப்பது ஏற்கக்கூடியதல்ல. உனக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்,” என்றார். இளவரசன் பயந்து நடுங்கினான். மன்னிக்கும்படி வேண்டினான். “நீ உடனே உன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் செல். அவளிடமும், அவளது கணவனிடமும் மன்னிப்பு கேள். அவர்கள் உன்னை மன்னித்தால் நானும் மன்னிப்பேன். மன்னிக்காவிட்டால், தண்டனை அளிப்பேன். இதைச் செய்யத் தவறினால் மறுமைநாளில் நானும் தலைகுனிய வேண்டி வரும்,” என்று கடுமையாகச் சொன்னார். இளவரசன் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிப்பிடித்து மன்னிப்பு கேட்டான். பெரும் தொகையை அவர்களுக்கு வழங்கினான். அவர்களிடம் மன்னிப்பு பெற்று, மன்னர் விதிக்க இருந்த தண்டனையில் இருந்து தப்பினான். அக்கால அரசர்களின் நீதி தவறாத ஆட்சி, இன்று வாரிசு அரசியல் செய்வோருக்கும், ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமையட்டும்.
|
|
|
|