|
நாரதருக்கு ஒரு முறை மக்கள் ராமனை அதிகம் விரும்புகிறார்களா அல்லது கிருஷ்ணனை அதிகம் விரும்புகிறார்களா? என்று சந்தேகம் வந்தது. முதலில் அயோத்தி சென்றார். அங்கு கிருஷ்ணரைப் புகழ்ந்து பேசி, “ ராமன், கிருஷ்ணன் இருவரில் யாரைப் பிடிக்கும்?” எனக் கேட்டார். அயோத்தி மக்கள், “கண்ணன் விளையாட்டுப் பிள்ளை. வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்றுதல், கேளிக்கை என வாழ்ந்தவன். எங்கள் ராமரிடம் உள்ள பொறுப்பு, தர்மம், நியாயம் அவனிடம் இருந்ததில்லை ஆக, எங்களைப் பொறுத்த வரை ராமனே உசத்தி ” என்றனர். அடுத்து நாரதர் மதுரா சென்றார். அங்கு ராமனைப் புகழ்ந்து பேசி, அதே கேள்வியைக் கேட்டார். மதுரா மக்கள், “ராமன் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ள, தந்தை சொற்படி காட்டுக்குச் சென்றார். பிறகு தன் மனைவி என்றும் பார்க்காமல் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். ஆனால் எங்கள் கிருஷ்ணனோ சகலகலா வல்லவன். மகாபாரதக் கதையின் உண்மையான நாயகன். போர்களில் தந்திரமும் வஞ்சகமும் சகஜம். போர்க்குணம் உள்ளவர்கள் பெண்களிடம் காதல் கொள்வதும் இயல்புதான் எனக் காட்டியவர் கிருஷ்ணன். ஆக, கிருஷ்ணனே சிறந்தவர்” எனக் கூறினர்.
அடுத்ததாக நாரதர் ஆஞ்சநேயரிடம் சென்றார். “ராமரா.... கிருஷ்ணரா? யார் சிறந்தவர்?” எனக் கேட்டார். “என்னைப் பொறுத்தவரை இருவரும் விஷ்ணு அம்சமே. அவர் சென்ற இடத்திற்கெல்லாம் லட்சுமியும் சென்றார். ராமர் திரேதாயுகத்தில் வாழ்ந்தவர். கிருஷ்ணரோ துவாபரயுகத்தில் வாழ்ந்தவர். ராமர், அவருடைய யுகத்தில் விதிக்கப்பட்ட நியாயத்துக்கு ஏற்ப அவதார புருஷனாய் வாழ்ந்தார். கிருஷ்ணரோ துவாபரயுகத்தின் தன்மைக்கு ஏற்ப காதல், வஞ்சகம், அரவணைப்பு என சாதுரியமாக வாழ்ந்து காட்டியவர். இருவரும் தத்தம் கடமைகளை காலச் சூழலுக்கு ஏற்ப செய்து முடித்தவர்கள். எனவே இருவருமே சிறந்தவர்கள் ” ஆஞ்சநேயரின் இந்த பதிலில் திருப்தி யடைந்த நாரதர், “நாராயணா!” என்று சொல்லி விடை பெற்றார். |
|
|
|