|
ஒரு சமயம் அன்னை பார்வதி, சிவபிரானை நினைத்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது தவத்தைக் கலைத்தது, ஓர் அலறல் சப்தம். அன்னை கண் திறந்து நோக்க, முதலை ஒன்றின் வாயில் அகப்பட்ட சிறுவன் ஒருவன் குரல் அது என உணர்ந்தாள். இடையூறை ஒதுக்கிவிட்டு கருமமே கண்ணாய் தவம் செய்ய, அன்னையின் இரக்க மனம் இடம் தரவில்லை. முதலையிடம் சென்று சிறுவனை விட்டுவிடுமாறு அறிவுறுத்தினாள் அகிலாண்டநாயகி.
“இவன் என் உணவு. என் பசிக்காக இறைவன் அனுப்பிய உணவு. எங்ஙனம் இவனை விடுவேன்?” மறுத்தது முதலை. “ உன் கஷ்டத்திற்கு பரிகாரமாக என் தவத்தின் பலன் முழுவதையும் உனக்கே தந்துவிடுகிறேன். அப்போதேனும் அவனை விடுவாயா?” மன்றாடினாள் அன்னை. “உன் தவப்பலனை எனக்களித்துவிட்டால், உன் எண்ணம் எப்படி ஈடேறும்? நீ சிவபிரானை அடைய முடியாதே! அப்போது என்ன செய்வாய்?” தன் கேள்விக்கணையால் பார்வதியை திணறவைத்தது பொல்லாத முதலை. “முதலையே! முதலில் என் தவப்பயனை ஏற்று சிறுவனை விடு. அவன் உயிர் காக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையானது. அவன் காப்பாற்றப்பட்டவுடன் மறுபடியும் தவம் செய்து ஈஸ்வரனுடன் இணைவேன். என்னுடைய அனைத்து தவப்பலனையும் உனக்கே அளிக்கிறேன். அதை ஏற்றுக்கொண்டு அக்குழந்தையை விட்டுவிடு” இரக்கம் மேலிட எடுத்துரைத்தாள் ஜகன்மாதா. முதலை, சிறுவனை விடவும், அங்கு எழுந்தருளினார். மாதொருபாகனார். “உமையே! உன் அன்பின் ஆழத்தையும் இரக்க சுபாவத்தையும் உலகுக்கு உணர்த்தவே முதலையாகவும், சிறுவனாகவும் நானே வந்தேன். தவத்தின் பலன் எப்போதுமே செய்தவருக்கு சொந்தமல்ல; தானத்தின் பலனும் அத்தகையதே. பிறருக்கு அவற்றை அர்ப்பணித்தால் அதன் பலன் பல்கிப் பெருகும் ” என்றார். சிவபிரான். தவத்தின் பலன் தானத்தால் பல்கிப் பெருக, தம் எண்ணமும் ஈடேற சிவனுடன் இணைந்தாள் அன்னை பார்வதி. |
|
|
|