|
வனவாசத்தின் போது ஸ்ரீராமர், மதங்க மாமுனிவரின் ஆசிரமத்திற்கு வந்திருந்தார். முனிவரின் சிஷ்யை சபரி, ராமபிரானை வரவேற்று உபசரித்தாள். அப்போது அந்த ஆசிரமத்தைச் சுற்றி நறுமணம் கமழும் மலர்ச்செடி வரிசையாக பூத்துக் குலுங்கியதைக் கண்டார். இம்மலர்கள் வீசும் பரிமளத்தால் இவ்விடமே ஆனந்தமாகத் திகழ்கிறதே! இந்தச் செடிகளை இக்காட்டில் நட்டவர் யார்? ” எனக் கேட்டார் ராமர். அதைக் கேட்ட சபரி, “அண்ணலே! மதங்க மகரிஷியின் மஹிமைதான் இது. ஒரு மழைநாளில் ஆசிரமத்தில் அடுப்பைரிக்க விறகே இல்லாது போனது. சீடர்களும் விறகு பொறுக்கச் செல்லவில்லை. முதியவரான மதங்கர் தம் தோளில் கோடரியைப் போட்டுக் கொண்டு விறகு வெட்டச் சென்றார். அதைக் கண்டதும் சீடர்களும் விறகு வெட்டச் சென்றனர். மாலையில் அனைவரும் ஏராளமான விறகுகளுடன் வந்தனர். மறுநாள் காலை இந்த இடமே நறுமணத்தால் கமழ்ந்தது. காரணம் புரியாது. நாங்கள் பார்த்த போது, மகரிஷி விறகு வெட்டிய மரங்களின் அருகில் அந்த நறுமணத்தைக் கண்டோம். வயதான காலத்திலும் பிறர் உதவியை எதிர்பாராது, தன்னம்பிக்கையுடன் உழைத்த அவரது நெற்றி வியர்வை சிந்திய இடமெல்லாம் நறுமண மலர்ச்செடிகள் வளர்ந்திருந்தன ” என்றாள். உழைப்பின் மேன்மையறிந்த ராமர், உள்ளம் நெகிழ்ந்தார். |
|
|
|