|
பாண்டவர்களை சூதாட வைக்கும் எண்ணத்தோடு
அழைப்பதற்காக துரியோதனன் ஓர் அழகிய மண்டபம் கட்டி, தர்மருக்கு அழைப்பு ஓலை
அனுப்பினான். அதில் திருதராஷ்டிரன் கையெழுத்திட்டிருந்தார். விதுரர் மூலமாக
தர்மருக்கு அனுப்பி வைத்தான் துரியோதனன். தர்மர் அந்த ஓலையை எடுத்துக்
கொண்டு தம்பிகளிடம் சென்றார், “திருதராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை...!
துரியோதனன் அனுப்பிய ஓலை! விதுரர் கொண்டு வந்த ஓலை ” என்று சொன்னார்.
அப்போது சகாதேவன், “அண்ணா, இந்த ஓலையை அனுப்பியது, கையொப்பமிட்டது, கொண்டு
வந்தது என்று மூன்று மனிதர்களை நினைக்கிறீர்கள். ஆனால் இந்த மூன்றையும்
செய்தவன் ஒருவன்தான். அவன் இப்போது நம் அரண்மனை வாசலிலேயே நின்று
கொண்டிருக்கிறான்! ” என்றான். “யாரது?” என்று கேட்டார் தர்மர். “அதுதான்
விதி! இருந்தால் விதியின்படி ஒன்று நடக்க வேண்டுமென்று மதியைக் கொண்டு அதை
மாற்ற முடியாது” என்றான் சகாதேவன். “அப்படியானால் விதியை மாற்றுவதற்கு
வழியே கிடையாதா? ” என்றான் அர்ஜுனன். “உண்டு, விதி அழைத்துச் செல்லும்
இருட்டுப்பாதையில் நாம் இடறி விழாமல் இருக்க பரந்தாமன் என்னும் கைவிளக்கை
நாம் எடுத்துப் போக வேண்டும் ” என்று விளக்கினான், சகாதேவன். ஆனால்
பாண்டவர்கள் பரந்தாமனை அணுகாமல் விதிவழியே சென்றதால் வனவாசம் செல்லும்
துயரரை அடைந்தனர். |
|
|
|