|
மற்றவர் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என நினைத்து நினைத்து சலித்த ஒருவன், கடவுளை நோக்கி தவமிருந்தான். கடவுள் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் பக்தா?” என்றார். “பிறர் மனதை அறியும் வரம் வேண்டும்” என்றான். கடவுளும் வரத்தை அளித்து மறைந்தார். சில நாள் கழித்து மீண்டும் தவமிருந்தான். கடவுள் தோன்றினார், “இப்போது என்னப்பா வேண்டும்?” “எனக்கு இந்த வரம் வேண்டாம் சுவாமி” “ஏன்? என்னாயிற்று?” “ஒவ்வொருவரும் என்னைப் பற்றி நினைப்பதை ஏற்க முடியவில்லை” “அப்படி என்ன நினைக்கிறார்கள்?”
“ஒருவன் என்னை, ‘பொய் சொல்கிறவன்’ என்கிறான், இன்னொருவன், ‘பொறாமை பிடித்தவன்’ என்கிறான். வேறொருவன் ‘அடுத்தவன் குடியை கெடுப்பவன்’ என்கிறான். இப்படி பலரும் பலவிதமாய் நினைப்பதை அறிந்த பின் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை” என்றான். கடவுள் பலமாக சிரித்து, “சரி. இந்த மரத்தடியில் கண்ணை மூடி தூங்கு. என்ன நடக்கிறது என்று கவனி” என்றார். அவனும் படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் குடிகாரன் ஒருவன் வந்தான், ‘குடிகாரப்பய எப்படி படுத்துக் கெடக்குறான் பாரு...” என்று சொல்லி கொண்டே கடந்து சென்றான். பின், ஒரு திருடன் வந்தான்,
“திருட்டு ராஸ்கல் நல்லா கொள்ளையடிச்சுட்டு வந்து இளைப்பாறுகிறான் பாரு...” என்றான். பின், ஒரு நோயாளி, “ரொம்ப வயித்துவலி போல சுருண்டு படுத்திருக்கான் பாவம்...” என்றான். பின், ஒரு துறவியோ, “நம்மைப் போல் துறவியாக நினைத்து விட்டான் போல...“ என்றவாறே சென்றார். சிறிது நேரத்தில் கடவுள் தோன்றினார், “ஒவ்வொருவரும் உன்னைப் பற்றி, என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள். ஒரே பார்வை என்பது எப்போதும் யாருக்கும் இருக்காது. அதையெல்லாம் பொருட்படுத்தாதே. உன் மனதிற்கு சரியென்று தோன்றுவதை செய்” என்றார். |
|
|
|