|
வியாபாரி ஒருவர் இரண்டு கிளிகளை வளர்த்தார். வியாபாரத்திற்காக வெளியூருக்கு செல்லும் போது, அவரது நண்பர்களான விவசாயியிடம் ஒரு கிளியையும், கசாப்பு கடைக்காரரிடம் ஒரு கிளியையும் கொடுத்து சென்றார். திரும்பி வந்து கிளிகளை பெற்றுக் கொண்ட பின், அவைகளுடன் பேச்சு கொடுத்தார். ஒரு கிளி, ‘நல்லது, நன்றி, வருக, எல்லாம் நலமே...’ என்று மிகவும் பண்புள்ள வார்த்தைகளை பேசியது. அதை கேட்டு மகிழ்ந்தார். இன்னொரு கிளியோ, ‘குத்து, கழுத்தை வெட்டு, கொல்லு...’ என்று மிக கேவலமாக பேசியது. இதை கேட்டு வருத்தம் கொண்டார்.
‘போகும் போது ஒரே குணத்துடன் விட்டுச் சென்ற, இரண்டு கிளிகளும் எப்படி இரு வேறு குணங்களை வெளிப்படுத்துகின்றன’ யோசித்தார். இருவேறு விதமான செயல்பாடு உள்ள நண்பர்களே காரணம் என்பது அவருக்கு புரிந்தது. பின், மெதுவாக அந்த கிளியை திருத்தி நல்வழிப்படுத்தினார். வசிக்கும் இடம், பழகும் ஆட்களை பொறுத்து நம் குணம் அமையும். இப்போது சொல்லுங்கள், நல்லதுக்கு காலம் இல்லையா என்ன?
|
|
|
|