|
இரவும், பகலும் போல், மனித வாழ்வில் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்திருந்தாலும், நம் செயல்களே, நம் வாழ்வின் நன்மைக்கும், தீமைக்கும் காரணமாகிறது என்பதை விளக்கும் கதை இது: சைந்தவப் பட்டிணத்தில், மனோஜவன் எனும் அரசர், ஆட்சி செய்து வந்தார். அவர் மனைவி, மக்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் நல்லவர்களாகவே இருந்தனர். தினமும், கோவில்களில் வேத ஒலியும், யாகங்களும் முறைப்படி நடந்தன. மக்களும், அமைதியாக வாழ்ந்து வந்தனர். தர்ம நெறியில், நல்லமுறையில் ஆட்சி செலுத்தி வந்த மன்னரின் மனம், திடீரென, போகங்களில் மூழ்கத் துவங்கியது. இதன் விளைவாக, மக்கள் மீது அதிகப்படியான வரிச் சுமையை சுமத்தியதுடன், கோவில்கள் மற்றும் ஆசிரமங்களில் இருந்த சொத்துகளையும் கவர்ந்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.
சதா சர்வ காலமும் சுக போகங்களில் மூழ்கியிருந்த அரசனின் நிலையறிந்து, சைந்தவப்பட்டிணத்தின் மீது போர் தொடுத்தனர், பகைவர்கள். போரில் தோற்று, தன் குடும்பத்தோடு, காட்டில் புகுந்து, ஒளிந்து வாழ்ந்தார், மன்னர். எட்டு நாட்கள் எந்தவிதமான உணவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை; வெறும் தண்ணீரைக் குடித்தே கழித்தனர். வழி நடையாலும், பசியாலும் துடித்த, அவரது குழந்தை சந்திரகாந்தன், அப்பா... பசி தாங்க முடியலை... என்று அழுதான். குழந்தையின் பசியை தீர்க்க முடியாத கொடும்பாவியாகி விட்டேனே... என்று புலம்பி, தன் தவறுகளையெல்லாம் சொல்லி அழுது, மயங்கி விழுந்தார், மன்னர். மனைவி சுமித்திரையும், குழந்தை சந்திரகாந்தனும் பதை பதைத்து அழுதனர். அச்சமயம், அக்காட்டு வழியாக வந்தார், பராசர முனிவர். அழுதபடி இருந்த அரசியையும், இளவரசனையும் பார்த்து, யார் நீங்கள்? எனக் கேட்டார். முனிவரின் திருவடிகளை வணங்கி, தன் துயரக் கதையை சொன்னாள், அரசி.
தாயே... தர்மநெறிப்படி ஆட்சி செலுத்தி வந்த உன் கணவன், தன் சுக போகங்களுக்காக, மக்களை துன்புறுத்தியும், கோவில் சொத்துக்களை கவர்ந்தும் கொடுங்கோலாட்சி செய்ததன் காரணமாகவே, இவ்வளவு துயரங்களும் வந்தன... என்று சொல்லி, கமண்டலத்தில் இருந்த நீரை, மன்னர் மீது தெளித்தார். மயக்கம் நீங்கி எழுந்து, முனிவரை வணங்கினார், மன்னர். தான் செய்த தீமைகளையெல்லாம் சொல்லி, தன்னை காக்கும்படி வேண்டினார், மன்னர். முனிவரும், மன்னா... தவறை உணர்ந்து திருந்தினால், கண்டிப்பாக நல்வாழ்வுண்டு. ராமேஸ்வரத்தில், ராமரால் கட்டப்பட்ட ராமசேதுவில், சீதா குண்டத்திற்கு அருகில் ஒரு புனித தீர்த்தம் உள்ளது. அதில் நீராடி, முன்னோர்களுக்கான பித்ரு கடன்களை செய்து, வழிபாடு செய்; துயரம் விலகும்... என்றார். மன்னரும் அவ்வாறே செய்தார்; படைகளெல்லாம் மன்னரை தேடி வந்து சேர, தெய்வத்தின் அருளால் பகைவர்களை வென்று, மறுபடியும் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார் மன்னர். நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால், நல்ல செயல்களை விதைக்க வேண்டும். அப்போது தான், நாமும், நம் சந்ததியினரும் நல் வாழ்வு பெற முடியும்! |
|
|
|