|
பொய் பேசாதவர்களே உத்தமர்கள். ஆனால் ராமாயணத்தில் இரு உத்தமர்களுக்கு, பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த காவல் தெய்வமான லங்கிணி, “ஏ வானரமே! யார் நீ?” என கேட்டாள். அதற்கு அனுமன் “நான் ராமதூதன், சீதையை பார்க்க வந்துள்ளேன்” என்று தானே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்லாமல், “இந்த இலங்கையின் செல்வ வளம் பற்றி கேள்விப்பட்டு பார்க்க வந்தேன்,” என்றார். ஏன் தெரியுமா? உத்தமி சீதையை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை. இதே போல அரக்கிகள், “இந்த அசோக வனத்தில் புதிதாக வந்த இக்குரங்கு அட்டகாசம் செய்கிறதே! இது பற்றி உனக்கு தெரியுமா?” என்றனர். “எனக்கென்ன தெரியும்! இப்படியெல்லாம் அட்டகாசம் செய்வதால் உங்களில் ஒருவராக தான் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்,” என சொல்லி விட்டாள். உத்தமரான அனுமனை காப்பாற்ற சொன்ன பொய் இது. உண்மையைப் படைத்த கடவுள், பொய்யை ஏன் படைத்தார் என இப்போது புரிகிறதா! நல்லவர்களுக்கு சோதனை வரும் போது அவர்களை காப்பாற்ற பொய் சொல்வதில் தவறில்லை. |
|
|
|