|
இரு சோம்பேறி இளைஞர்கள், குறுக்கு வழியில் பணம் தேட முடிவெடுத்து திருட ஆரம்பித்தனர். முதலில் அக்கம் பக்கத்து சிறிய வீடுகளில் திருடினர். அவர்கள் தான் சோம்பேறி ஆயிற்றே. திருடுவதும் கஷ்டமாக தானே இருக்கும். அதனால், பெரிய அளவில் திருடி சுகமாக வாழ திட்டமிட்டனர். ஒருநாள் பண்ணையார் வீட்டில் திருடப் போய், சிக்கிக் கொண்டனர். அடித்து உதைத்ததோடு, நெற்றியில் ’ப.தி.’ (பக்கா திருடன்) என்று எழுதி துரத்தினார் பண்ணையார். இருவரும் ஊருக்குள் நடமாட முடியவில்லை. அவமானம் தாங்காமல் ஒருவன் தற்கொலை செய்தான். இன்னொருவனுக்கோ அதற்கும் மனசில்லை. பசியும் பட்டினியுமாக அலைந்தான். கடைசியாக ஊருக்கு வெளியில் இருந்த பாழடைந்த சிவன் கோயிலுக்கு வந்தான். பசியால் கண்கள் இருள, மரணமே மேல் என தோன்றியது.
கடவுளே கதி என்று கும்பிட்டான். மரத்தின் மேலிருந்த குரங்கு ஒன்று, பழத்தை வீசியது. அதை சாப்பிட்டு உயிர் பிழைத்தான். சிவன் தான் காப்பாற்றினார் என நம்பியதால் பக்தி உண்டானது. கோயிலை சுத்தம் செய்து, பூஜை செய்ய ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அங்கு வர ஆரம்பித்தனர். காலம் மாறியது... அவன் அருளாளராக மாறினான். ஆனால் நெற்றியில் இருந்த ’ப.தி.’ மாறுமா? மாறும். மாறியது. ஆம், ’பக்தர் திலகம்’ என அன்போடு அழைக்கப்பட்டான். அவன் இறந்த பிறகு அந்த கோயிலில் அவனுக்கு சிலை வைத்தனர் மக்கள். என்னடா அன்றைக்கு திருட்டு பட்டம் கொடுத்த மக்கள், இன்று சிலை வைக்கிறார்களே என்று நினைக்கிறீர்களா... எல்லாம் நினைப்பு தான். அது பிழைப்பை கெடுக்க மட்டுமல்ல; கொடுக்கவும் செய்யும். |
|
|
|