|
முனிவர் ஒருவர் மனித நடமாட்டமில்லாத காட்டில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள், ஒரு நாயைச் சிறுத்தை ஒன்று துரத்தி வந்தது. நாயின் மீது பரிதாபம் கொண்ட முனிவர், அதைச் சிறுத்தையாக மாற்றினார். அந்தச் சிறுத்தை முனிவருக்கு நன்றி கூறி அங்கேயே தங்கியது. பின்னர் ஒரு நாள், புலியால் துரத்தப்பட்டது. இப்போது முனிவர் சிறுத்தையைப் புலியாக்கினார். சில நாள் சென்றன. வலிமை அதிகம் கொண்ட ஒரு சரபப் பறவை ஒன்று அந்தப் புலியைத் தாக்கியது. அதனால் அந்த முனிவர் புலியைச் சரபமாக மாற்றினார். இப்போது வலிமைமிக்க சரபமாக மாறியிருந்த நாய் நினைத்தது....‘ஒரு வேளை இந்த முனிவர் என் மீது இரக்கம் காட்டியதுபோல், காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையும், பறவைகளையும் சரபமாக மாற்றிவிட்டால் என்னாவது? ஆகவே, இந்த முனிவரை முதலில் விழுங்கிவிடுவோம்’ என்று! அதன் எண்ணத்தை தவ வலிமையால் அறிந்துகொண்ட முனிவர், சரபத்தின் மீது தன் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து, மீண்டும் நாயாகக் கடவது’ என்று சபித்தார். ஒரே நொடியில் அந்தச் சரபம் பழையபடி நாயாக மாறியது. நம் எண்ணங்களைப்போலவே நம் வாழ்க்கையும் அமையும். நம் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது. |
|
|
|