|
அரசன் ஒருவனுக்குத் திடுமென ஓர் ஆசை தோன்றியது. பிரம்மத்தின் - இந்தப் பிரபஞ்ச பிரமாண்டம் குறித்த மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்பதே அவனது ஆசை. அதுகுறித்து திருப்தியான விளக்கம் தருபவர்களுக்கு நிறைய வெகுமதிகள் அளிக்கப்படும் என்று அறிவிப்பும் வெளியிட்டான். சான்றோர்கள் பலரும் அவனது அரசவைக்கு வந்து விளக்கம் தந்தனர். ஆனால், அவற்றிலெல்லாம் மன்னனுக்குத் திருப்தி வாய்க்கவில்லை. எனினும் பிரம்மத்தை அறியும் ஆவலையும் அவனால் அடக்க இயலவில்லை.
இந்த நிலையில், ஒருநாள் அவன் கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கே சிறுவன் ஒருவன் தன் சிறு கரங்களில் கடல்நீரை மோந்துவந்து கரையில் இறைத்துக்கொண்டிருப்பதைக் கண்டான். சிறுவனின் இந்த விநோதச் செயலுக்கான காரணத்தை அறிய விரும்பிய அரசன், அவனை அழைத்து விசாரித்தான். “கடல் நீரையெல்லாம் காலியாக்கிவிட்டு, சமுத்திரத்தில் நீர் இல்லாமல் செய்யப்போகிறேன்” என்று பதில் சொன்னான் சிறுவன். அதைக் கேட்டுச் சிரித்துவிட்டான் மன்னன். “கடல் நீரைக் காலியாக்குவது இயலாத காரியம்” என்று சிறுவனுக்குப் புத்தமதியும் சொன்னா. அதற்குச் சிறுவன் பதில் சொன்னான்; “அரசே! இந்தப் பிரபஞ்சம் மிகவும் பெரியது. அதில் நீங்கள் ஒரு சிறு பொறி. அப்படியிருக்க, நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி அறிந்துகொள்ள எண்ணுகிறீர்களோ அதேபோன்றுதான் எனது செயலும்” என்று கூறினான். அரசனுக்கு உண்மை புரிந்தது; தனது எண்ணத்தை அத்துடன் கைவிட்டான். |
|
|
|