|
ஒரு முறை பூலோகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதர், வழியில் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்தார். அதை எடுத்து, அதன் தலையெழுத்தைப் படித்துப் பார்த்தார். ‘பிறந்தது முதல் வறுமை, சில ஆண்டுகள் சிறைவாசம். கடற்கரையில் மரணம். அதன் பிறகு யோகம்’ என்று எழுதியிருந்தது. நாரதருக்கு குழப்பமாகி விட்டது. ‘இறந்த பிறகு ஒருவனுக்கு என்ன யோகம் வேண்டிக் கிடக்கிறது?’ என்று நினைத்து, அந்த மண்டை ஓட்டுடன் பிரம்மாவிடம் வந்து விளக்கம் கேட்டார். “பிரம்ம தேவா, என்ன தலையெழுத்து இது? மரணத்துக்குப் பின் யோகமா?” என்று கேட்டார். பிரம்மா விளக்கினார். “இதில் தவறு ஒன்றும் இல்லை. அந்த மண்டை யோட்டுக்காரனின் விசேஷமே தனி. மண்டையோட்டை யாரும் தேவலோகம் வரை எடுத்து வர முடியாது. இது வந்து விட்டது. இனி, இது மண்டையோடு அல்ல. பிரம்ம கபாலம் என்றாகி விட்டது. அது யோகம் இல்லையா? இனி இதில் வாழ்ந்த மனிதனுக்கும் பிறவியே கிடையாது. இந்த யோகம் மரணத்துக்குப் பின்னர்தானே வந்தது. அதனால் நான் எழுதிய விதியில் தவறு ஒன்றும் கிடையாது” என்றார். நாரதரும், “உண்மை, உண்மை....” எனச் சொல்லி வந்த வழியே திரும்பினார். எனவே, விதி வலியது. மரணத்துக்குப் பின்கூடத் தொடரும். |
|
|
|