|
“ஐயோ கடவுளே...எனக்கு ஏன் தான் இந்த ஜென்மத்தை குடுத்தியோ?“ என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தான் ஏழை ஒருவன். அவனது புலம்பல் கேட்டு, மாறுவேடத்தில் அவன் வீட்டிற்கு வந்தார் கடவுள். “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்.... தருகிறேன்“ என்றார். “அட போய்யா... நீயே பார்க்க பரிதாபமா இருக்க. இதுல எனக்கு என்னத்த குடுத்துற போற?“ என்று சலித்துக் கொண்டான். கடவுள் புன்னகைத்து கொண்டே, அவன் வீட்டில் இருந்த பொருட்களை நோட்டமிட்டார்.மூலையில் கிடந்த ஒரு பாத்திரத்தை நோக்கி, தன் வலதுகை ஆள்காட்டி விரலை நீட்டினார். உடனே அது தங்கமாய் மாறியது! இதைப் பார்த்த ஏழைக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எழுந்து ஓடிப் போய் அந்த பாத்திரத்தை தடவிப் பார்த்தான். “யோவ்.... நீ மேஜிக்காரன் தானே“ என்று சிரித்தபடியே, அங்கிருந்த பழைய பீரோவைச் சுட்டிக்காட்டி “எங்கே இதை மாத்து பாப்போம்“ என்றான். கடவுள் விரலை நீட்ட, துருப்பிடித்த பீரோ தங்கமயமானது. வியப்புடன் ஆடிப்பாடி மகிழ்ந்த ஏழை, வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் தங்கமாக மாற்றச் சொன்னான். கடவுளும் அப்படியே மாற்றினார்.
சிறிது நேரம் அமைதி காத்த ஏழை, தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தான். “இன்னும் என்னப்பா யோசனை?“ என்றார் கடவுள். ஏழை புன்னகையுடன், “நான் ஒண்ணு கேட்டா தருவீங்களா” “என்ன... கேள்” “இல்ல... எனக்கு உங்களோட ஆள்காட்டி விரல் வேணும்” என்றான். சத்தமாக சிரித்த கடவுள் அங்கிருந்து மறைந்தார். தங்கமாக மாறிய அத்தனை பொருட்களும் சட்டென பழைய நிலையை அடைந்தன. தலையில் கைவைத்து சரிந்தான் ஏழை. இப்போது கடவுளின் குரல் மட்டும் ஒலித்தது...“எந்த காலத்திலும் பேராசை தீராது. எதையும் உன்னை அனுபவிக்க விடாமல் கெடுத்து விடும். முதலில், இருப்பதில் நிறைவாக வாழ கற்றுக்கொள்!“
|
|
|
|