|
திருச்செந்தூரில் முத்தம்மை என்னும் பெண் இருந்தாள். கோயிலில் பக்தர்கள் பாடுவதை கண்ட அவளுக்கு, முருகன் மீது பக்தி உண்டாக, தினமும் பாடுவதை கடமையாக கொண்டாள். இளமை கழிந்து, முதுமை அடைந்த முத்தம்மைக்கு மனதில் ஒரு ஏக்கம் எழுந்தது. “முருகா! உன்னை ஒன்று கேட்பேன். எவ்வளவோ காலமாக நான் பாடுகிறேன். அதன் பயனாக, என் உயிர் பிரியும் முன் உன்னை காணும் பாக்கியம் தருவாயா” என்று வேண்டினாள். ஒருநாள் அவள் பாடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு இளைஞன் தூண் மறைவில் நிற்பது போலிருந்தது. முத்தம்மை,“ஏன் மறைவாக நிற்கிறாயப்பா...அருகில் வரலாமே” என்றாள். ஆனால் அந்த இளைஞன் பதிலேதும் சொல்லாமல் சென்றான். ஆனாலும் அவனைக் கண்ட முத்தம்மையின் மனம், இனம் புரியாமல் மகிழ்ந்தது. அன்றிரவு முருகனின் திருவடியை சிந்தித்தபடி தூங்கினாள். மறுநாள் காலையில், யாரோ வீட்டுக் கதவைத் தட்டும் ஓசை கேட்டது. ஜன்னல் வழியாக பார்த்தாள் முத்தம்மை. தூண் மறைவில் நின்ற இளைஞன் மனைவியுடன் நின்றிருந்தான். “யார் நீங்கள்? இந்த காலைப்பொழுதில் எதற்காக வந்தீர்கள்? என்று எதுவும் முத்தம்மைக்கு கேட்கத் தோன்றவில்லை. காந்தம் கண்ட இரும்பு போல, அவர்களுடன் கிளம்பினாள் முத்தம்மை. இளைஞனும், அவன் மனைவியும் முன்னே நடக்க, முத்தம்மை பின் தொடர்ந்தாள். திருச்செந்தூர் கோயில் வந்ததும், அங்கு இளைஞன் முருகனாகவும், அவன் மனைவி வள்ளியாகவும் காட்சியளித்தனர். நேரில் தரிசித்த மகிழ்ச்சியில் முத்தம்மையின் உயிர், முருகனின் திருவடியில் கலந்தது. |
|
|
|