|
காஞ்சி மடத்தில் அன்பர் ஒருவர் மகா சுவாமிகளிடம், பணக்காரர்கள் தங்கள் பெருமையைக் காட்டவே கோயில்களுக்கு நன்கொடை கொடுப்பதாக அங்கலாய்த்தார். அவர்களுக்கு உண்மையான பக்தி இல்லை என்பது அவரது எண்ணம். “இருக்கட்டுமே...பெருமைக்காக என்றாலும் நல்ல விஷயத்திற்கு யார் பணம் தருகிறார்கள்? சிலருக்குத் தானே தர்மம் செய்வதில் ஈடுபாடு இருக்கு? ஆனால் கடவுள் உண்மை பக்தியை மதிக்க தவறியதில்லை. நிச்சயம் அதற்கு பெருமை சேர்க்கிறார் என்பதற்கு தஞ்சாவூர் கோயில் பற்றிய செவிவழிக்கதை ஒன்றுண்டு.” என்று அதை சொல்ல முன்வந்தார். தஞ்சாவூர் கோயிலை ராஜா கட்டிக் கொண்டிருந்தார். ஏராளமான சிற்பிகள் பணியில் ஈடுபட்டனர். ஏழைப் பாட்டி ஒருத்தி, சிற்பிகளுக்கு தாகம் தணிக்கும் விதமாக, அவ்வப்போது நீர்மோர் கொடுத்து வந்தாள். திருப்பணியில் தன் பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும் என விரும்பினாள். மருந்து அரைக்கும் கல் ஒன்று பாட்டியிடம் இருந்தது. நீண்டகாலம் மருந்து அரைத்ததால், வழவழப்பாக மாறியிருந்தது அந்தக் கல். அதை பிரதான சிற்பியிடம் கொடுத்து, “என்னோட உபயமாக இந்தக் கல்லை வைத்துக் கொள்ளப்பா” என வேண்டினாள். சிற்பியும் அதைக் கூம்பு மாதிரி செதுக்கி, கோபுரக் கலசத்தின் மேற்பகுதியில் வைத்தார்.
கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தாகி விட்டது. அந்த சமயத்தில், “உலகாளும் நாயகனான சிவனே! நான் கட்டிய கோயிலின் கோபுர நிழலில் ஆனந்தமாக இருக்கிறீர்களா” என மனதிற்குள் பெருமிதம் பொங்க கேட்டான் நாடாளும் மன்னன். கனவில் தோன்றினார் சிவன். “மன்னவா...என் பக்தை கிழவியம்மா கொடுத்த நிழலில் ஆனந்தமாக இருக்கிறேன்!” என தெரிவித்தார். திகைப்பில் ஆழ்ந்த மன்னன், “கோபுரத்தை அமைக்க யாராவது கிழவி உபகாரம் பண்ணினாளா?” என்று பிரதான சிற்பியிடம் விசாரித்தான். சிற்பிகளுக்கு நீர்மோர் வழங்கிய பாட்டி மூலம், கல் கிடைத்த விபரத்தை விவரித்தார் சிற்பி. பாட்டியை வரவழைத்த மன்னன், அவரைக் கண்டதும் கோபுர வாசலிலேயே காலில் விழுந்து வணங்கினான். யாருடைய பக்தி எப்படிப்பட்டது என்பதை கடவுள் நன்கறிவார். பணக்காரன், ஏழை என்ற பேதம் அவருக்கு கிடையாது. திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|