|
ஆழ்வாராகவும், ஆச்சார்யாராகவும் அவதரித்தவர் நம்மாழ்வார். திருமாலின் படைத்தளபதியான சேனைமுதலியாரின் அம்சம் கொண்ட இவர், தாமிரபரணிக்கரையில் உள்ள ஆழ்வார்திருநகரி என்னும் திருத்தலத்தில் வைகாசி விசாகநாளில் அவதரித்தார். பெற்றோர் காரியார், உடையநங்கை. “மாறன்” என குழந்தைக்கு பெயரிட்டு வளர்த்தனர். பால் குடிக்க மறுத்த மாறனை, அங்கு கோயில் கொண்டிருக்கும் பொலிந்துநின்றபிரான் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையோ அங்கிருந்த புளியமரத்தடிக்கு தவழ்ந்து சென்று அமர்ந்தது.
அங்கேயே வளர்ந்து 16 ஆண்டு தவத்தில் ஈடுபட்டது. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய பாடல்கள் நம்மாழ்வார் பாடியவை. இவை ரிக், யஜுர், சாமம், அதர்வண வேதங்களின் சாரமாகத் திகழ்கின்றன. 35 திருத்தலப் பெருமாள்களைப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு காரிமாறன், வகுளாபரணர், பராங்குசர், சடகோபர் என்ற பெயர்களும் உண்டு. திருக்கோளூரில் அவதரித்த மதுரகவியாழ்வார் இவரை குருவாக ஏற்று ““கண்ணி நுண் சிறுத்தாம்பு” என்னும் பாடல் பாடினார். 35 ஆண்டுகள் வாழ்ந்த நம்மாழ்வார் இறுதியில் பரமபதத்தை அடைந்தார். மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலை, கம்பரின் சடகோபரந்தாதி ஆகிய நூல்கள் நம்மாழ்வாரின் பெருமையை போற்றுகின்றன. ஆடாது அசையாது, இருந்த இடத்தில் அமர்ந்து பெருமாளை வரவழைத்துப் பாடிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
|
|
|
|