|
ஒரு முறை - கஜமாத்திர முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால், இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்து விடும். பதவியை காப்பாற்றிக் கொள்ள, சபையில் நடன மாதர்களாக உள்ள, ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில், ஒருவரை அனுப்பி, முனிவரின் தவத்தை கலைக்க நினைத்தான். யாரை அனுப்புவது என்று இந்திரனுக்கு புரியவில்லை; இருவரும் தாங்களே செல்வதாக போட்டியிட்டனர். ஒருவர் தான் செல்ல வேண்டும்; உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்... என்றான் இந்திரன். நடன கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது; எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்... என்று, கூறினாள் ரம்பை. ரம்பை நடனக்கலை ஒன்றில் தான் சிறந்தவள்; நான், சகல கலைகளிலும் சிறந்தவள். என்னை விட தகுதி பெற்றவர், வேறு எவர் இருக்க கூடும்... என்றாள், ஊர்வசி. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க இந்திரனால் முடியவில்லை. இச்சமயத்தில், நாரதர் அங்கு வந்தார்; அவரை வரவேற்று உபசரித்தான் இந்திரன். இந்திரதேவா... ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்... என்று கேட்டார் நாரதர். ஐயனே... கஜமாத்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார்; அவரது தவத்தை கலைக்க, என் நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன்; இவர்களில் யாரை பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை... என்றான், இந்திரன்.
இரண்டு பேரையும், சபையில் நடன மாட செய்து, சிறப்பாக எவர் நடமாடுகிறாரோ, அவரையே பூலோகத்திற்கு அனுப்பி விடு... என்றார் நாரத முனிவர். மறுநாள் - இந்திர சபையில், ரம்பை, ஊர்வசி இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது; தேவர்களும், கலைவாணர்களும் சபையில் குழுமிருந்தனர். நடனம் ஆரம்பமாயிற்று; இருவரும் சளைக்காமல் ஆடினர்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவில்லை; எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல், அனைவரும் குழம்பினர். இச்சமயத்தில், நாராத முனிவர் எழுந்து, இந்திரனே... இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தை செய்யக் கூடிய ஒருவர், பூலோகத்தில் வசிக்கிறார்; அவர் பெயர் விக்கிரமாதித்தன். சகல கலைகளையும் உணர்ந்தவர். அவரை அழைத்து வந்தால், ரம்பை, ஊர்வசி இருவரில், எவர் சிறந்தவர் என்பதை கூறி விடுவார் என்றார். உடனே, இந்திரன் தன் தேரோட்டி மாதிரியை அழைத்து, உஜ்ஜயினி பட்டணத்திற்கு சென்று, விக்கிரமாதித்தனை உடனே இங்கு அழைத்து வா... என்றான். மாதிரிக்கு, விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்து வர விருப்பமில்லை. ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா என்று நினைத்தான். இதை அறிந்த நாரத முனிவர், மாதிரி... விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! அவர் தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்க கூடியவர்; இங்கு எழுந்துள்ள, சிக்கலான பிரச்னையை தீர்த்து வைக்க கூடியவர். எனவே, தாமதம் செய்யாமல், இங்கு அழைத்து வா... என்றார்.
அரை குறை மனதுடன் பூலோகத்திற்குச் சென்று விக்கிரமாதித்தனிடம் கண்டு, தகவலை கூறினான் மாதிரி. தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக, தம் வலது காலை எடுத்து வைத்தார் விக்கிரமாதித்தன். இடது கால், தரையில் இருந்தது. அச்சமயத்தில், இந்த மானிடன், இந்திரலோகத்திற்கு வருவதா என்ற எண்ணத்துடன், விமானத்தை திடீரென்று கிளப்பினான் மாதிரி. இதை அறிந்த விக்கிரமாதித்தன், தம் வலது காலின் பெருவிரலை தேர்த்தட்டில் அழுத்தமாக ஊன்றினார். எவ்வளவு முயற்சி செய்தும், விமானத்தை மாதிரியால் மேலே கிளப்ப முடியவில்லை; விக்கிரமாதித்தனிடம் மன்னிப்பு கேட்டான் மாதிரி. பிறகே, விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது. விக்கிரமாதித்தனை எதிர்கொண்டு அழைத்தான், இந்திரன். தக்க ஆசனம் கொடுத்து, அமரச் செய்தான்; பின், செய்தியை கூறி, அவரிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான். விக்கிரமாதித்தரே... இந்த இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ, அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்... என்றான், இந்திரன். போட்டி ஆரம்பமாகியது; இருவரும் முன் போலவே, ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர்; விக்கிரமாதித்தனுக்கும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரிய வில்லை. தேவேந்திரா... இருவரும் தனித்தனியாக ஆடினர்; எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை; நாளை இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள்; அதைப் பார்த்த பின், என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்... என்றார் விக்கிரமாதித்தன். மறுநாள் - காலையில், நந்தவனத்திற்குச் சென்றார் விக்கிரமாதித்தன். அங்குள்ள மலர்களைப் பறித்து, உள்ளே நிறைய வண்டுகளை வைத்து, இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினார்.
இரவு நடன நிகழ்ச்சி நடந்த போது, தான் தயாரித்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், வெறுங்கையுடன் ஆடினால், அழகாக இல்லை; இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்தபடி, ஆடினால் அழகாக இருக்கும்... என்று கூறிய விக்கிரமாதித்தன், இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தார். ரம்பையும், ஊர்வசியும் பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல, ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறே, வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். அவள் அழுத்திப் பிடித்ததால், அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைக் கொட்டத் துவங்கின. வலி தாங்காத ரம்பை, ஆட்டத்தை மறந்தாள்; தாறுமாறாக ஆட ஆரம்பித்தாள்.ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால், பூச்செண்டை மென்மையாக பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால், வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை; தாளத்துக்கு தக்கவாறு ஆடினாள்.
ஊர்வசியே சிறப்பாக நடமாடினாள்... என்றார் விக்கிராதித்தன். இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தார். விக்கிரமாதித்தன் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன், அவரைப் பாராட்டினான். இந்திரப் பட்டம் ஏறிய போது, பரமேசுவரனால் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை, விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான். அழகு மிகுந்த, அந்த சிம்மாசனத்திற்கு, 32 படிகள் இருந்தன. ஒவ்வொரு படியிலும், ஒரு அழகிய பொம்மைகள் இருந்தது. சிம்மாசனத்தில் ஏற வேண்டுமானால், ஒவ்வொரு பதுமையின் தலைமீதும் கால் வைத்துதான் ஏறவேண்டும். இந்த சிம்மாசனத்தில் இருந்தவாரே ஆயிரம் ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக... என்று வரம் அளித்தான் இந்திரன். ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன், உஜ்ஜயினி பட்டணத்தை அடைந்தார் விக்கிரமாதித்தன். |
|
|
|