|
குருகுலத்தில் புதிதாக சேர்ந்தான் சாந்தன்.அறிவில் சிறந்த அவன் மீது குருநாதர் அன்பு காட்டினார். இதையறிந்து மூத்த சீடர்கள் பொறாமைப்பட்டனர். அடிக்கடி சாந்தன் மீது புகார் தெரிவித்தனர். இதை அறிந்த குரு, அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட விரும்பினார். எல்லா சீடர்களையும் அழைத்து, “அன்புச் செல்வங்களே! உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன்” என்றார்.அதன்படி சீடர்களுக்கு எதிரே ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிவது தான் போட்டி. ஒவ்வொருவராக பொம்மைகளின் அருகில் நின்று பல கோணங்களில் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு ஏதும் புரியவில்லை. அமைதியாக இருந்தனர். மெல்லிய, நீளமான ஒரு கம்பியுடன் வந்தான் சாந்தன். அந்த கம்பியை முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். பொம்மையின் மறு காது வழியே கம்பி வந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்த போது, கம்பி வாய் வழியே வந்தது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்த போது கம்பி வெளியே வரவில்லை.
மூன்றாவது பொம்மையே சிறந்தது என்று சொல்லி விளக்கம் அளித்தான் சாந்தன். “இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியை நமக்கு சொல்கின்றன. குருநாதர் சொல்வதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும் ரகத்தைச் சேர்ந்தது முதல் பொம்மை. கேட்டதை அப்படியே எடுத்துச் சொல்வது இரண்டாவது ரகம். கேட்டதை மனதிற்கு அனுப்பி, தன்னை சீர் செய்வது மூன்றாம் ரகம். இந்த அடிப்படையில் மூன்றாவது பொம்மை சிறந்தது.” சாந்தனின் விளக்கம் கேட்ட மற்றவர்கள் வாயடைத்து நின்றனர். |
|
|
|